Wednesday, November 3, 2010

இந்திய அணியை சமாளிக்குமா நியூசி?



ஆமதாபாத்தில் துவங்கும் முதல் டெஸ்டில், இன்று இந்திய அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. சொந்த மண் பலத்தில் களமிறங்கும் வலிமையான இந்தியாவை, நியூசிலாந்து அணி சமாளிப்பது கடினம் தான். இப்போட்டியில் இந்தியாவின் சச்சின் இன்று 50 வது சதத்தை எட்டி, புதிய வரலாறு படைப்பார் என நம்பப்படுகிறது.
மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, நியூசிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் வரும் இன்று, ஆமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் மொடிரா மைதானத்தில் துவங்குகிறது.
இந்திய அணி சர்வதேச டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் "நம்பர்-1' இடத்திலுள்ளது. சொந்தமண்ணில் வியக்கத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்திய அணி, கடந்த இரண்டு ஆண்டுகளில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக மட்டும் இரண்டு முறை தோற்றது. கடைசியாக கோல்கட்டா டெஸ்டில் (தென் ஆப்ரிக்கா) வென்ற இந்தியா, அடுத்து ஆஸ்திரேலியாவுடன் அடுத்தடுத்து வென்று, "ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளது.
சச்சின் பலம்:
கடைசியாக, சச்சின் பங்கேற்ற 9 டெஸ்டில் (15 இன்னிங்ஸ்) இரண்டு இரட்டை சதம் உட்பட, 6 சதத்துடன் மொத்தம் 1270 ரன்கள் குவித்து (சராசரி 97.69) அசத்தலான பார்மில் உள்ளார். இன்றும் இவர் தனது அனுபவத்தை தொடரும் பட்சத்தில், சர்வதேச அளவில் 50 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெறலாம். தவிர, எவ்வித பவுலிங்கையும் துவம்சம் செய்து, அதிரடி துவக்கம் தரும் சேவக், லட்சுமண் என இந்தியாவின் பேட்டிங் வலுவாக உள்ளது.
இவர்களுடன் டிராவிட், காம்பிரும் பார்மை மீட்கும் பட்சத்தில் எளிதாக ரன்குவிக்கலாம். கடைசியாக இங்கு நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்டில் இந்தியா 32/4 என திணறிய போது, டிராவிட் தான் சதம் அடித்து (177) மீட்டார். இதேபோல மீண்டும் கலக்கலாம். இவர்களுடன் பின் வரிசையில் கேப்டன் தோனி, ரெய்னா ஆகியோரும் இருப்பதால் முரளி விஜய், புஜாராவுக்கு வாய்ப்பு கிடைக்காது.
விக்கெட் வேட்டை:
வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாகிர் கான் (254 விக்.,), இஷாந்த் சர்மா (76), ஸ்ரீசாந்த் (62) ஆகிய மூவரும் இணைந்து 109 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 392 விக்கெட் வீழ்த்திய அனுபவத்தில் <உள்ளனர். இவருடன் இதே மைதானத்தில் இதுவரை 28 விக்கெட் சாய்த்த ஹர்பஜன், பிரக்யான் ஓஜா போன்ற சுழற் பந்து வீச்சாளர்களும் நம்பிக்கை தருவார்கள்.
எழுச்சி பெறுமா:
அதேநேரம் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மோசமாக இழந்த நியூசிலாந்துக்கு அணிக்கு, இந்தியாவின் பேட்டிங் படையை எதிர்கொள்ள அசாத்திய சக்தி கட்டாயம் தேவைப்படும். இந்த அணியின் துவக்க ஜோடி அலங்கோலமாக உள்ளது. இதனால் பிரண்டன் மெக்கலத்தை துவக்க அல்லது 3வது இடத்தில் களமிறக்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து வெட்டோரி கூறுகையில்,"" டெஸ்ட் அணியில் துவக்க இடம் என்பது எப்போதுமே, எங்களுக்கு பிரச்னையாக உள்ளது. சமீபத்தில் நல்ல பார்முக்கு திரும்பியுள்ள மெக்கலம், ஒருநாள் அணி போல, இந்த இடத்தை சரியாக நிரப்புவார் என நம்புகிறோம்,'' என்றார். இவர் தவிர ரோஸ் டெய்லர், ரைடர், அறிமுக வில்லியம்சனும் ரன்குவிப்புக்கு உதவுவார்கள் எனத் தெரிகிறது.
பலவீன பவுலிங்:
பவுலிங்கில் 56 டெஸ்டில் 187 விக்கெட் வீழ்த்திய கிறிஸ் மார்டின் மட்டும் தான் அனுபவசாலி. மற்றபடி வாட்லிங், ஆன்டி மேக்கே ஆகியோர் புதியவர்கள் தான். சுழலில் கேப்டன் வெட்டோரியின் அனுபவம் கைகொடுக்கலாம்.
மொடிரா மைதானத்தில் விளையாடிய இரண்டு போட்டியையும், டிரா செய்த ஆறுதலுடன் நியூசிலாந்தும் உள்ளது. ஆனால் இங்கு 3ல் இந்தியா வென்றுள்ளது. தவிர, கடைசி 6 போட்டியில் 5ல் வென்ற உற்சாகத்துடன் களம் காணும் தோனியின் படையை நியூசிலாந்து சமாளிக்குமா என்பது சந்தேகம் தான். 
வேகத்துக்கு கைகொடுக்கும்
ஆமதாபாத்தில் நடந்த கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், இலங்கையின் வெலகேதிரா போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட் வீழ்த்தினர். 
புதிய சாதனையை நோக்கி...
* இன்று போட்டி நடக்கும் ஆமதாபாத், சர்தார் படேல் மைதானத்தில் பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. கடந்த 1987ல் (எதிரணி-பாகிஸ்தான்) இந்திய லிட்டில் மாஸ்டர் கவாஸ்கர், சர்வதேச அளவில் 10,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை இங்கு படைத்தார்.
* கடந்த 1993-94ல் இலங்கையின் திலகரத்னேவை அவுட்டாக்கிய கபில் தேவ், டெஸ்ட் போட்டிகளில் 432 விக்கெட் வீழ்த்தி, நியூசிலாந்து வீரர் ஹாட்லீயின் (431) சாதனையை முறியடித்தார்
* கும்ளே தனது 350 வது விக்கெட்டை(எதிரணி-நியூசிலாந்து) இந்த மைதானத்தில் தான் கைப்பற்றினார்.
* சச்சின் தனது முதல் இரட்டை சதத்தை, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் (1999-00) இங்கு அடித்தார்.
* முதல் தர கிரிக்கெட்டில் 200வது கேட்சை, டிராவிட் இம்மைதானத்தில் தான் பிடித்தார்.
*இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, முதல் தர கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்தது இங்குதான்.
* இந்திய துணைக்கண்டத்தில் குறைந்த ஓவரில் முடிந்த (20 ஓவர்) டெஸ்ட் இன்னிங்ஸ் என்ற வேதனையான சாதனையை இந்தியா (எதிரணி-தென் ஆப்ரிக்கா), இங்குதான் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தியது.
* 1996ல் இங்கு நடந்த டெஸ்டில், தென் ஆப்ரிக்காவின் 6 வீரர்களை "டக்' அவுட்டாக்கிய வீரர் என்ற பெருமையை இந்தியாவின் ஸ்ரீநாத் ஏற்படுத்தினார்.
* இந்த வரிசையில் இப்போட்டியில் இந்தியாவின் சச்சின், 50 சதத்தை நிறைவு செய்து, வரலாறு படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
200 வது கேட்ச்
முதல் தர போட்டிகளில் மொடிரா மைதானத்தில் 200வது கேட்ச் பிடித்து சாதித்துள்ள டிராவிட், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 198 கேட்ச் பிடித்துள்ளார். பல சாதனைகளுக்கு உதவும் இங்கு, 200 வது கேட்ச் என்ற மைல்கல்லை டிராவிட் எட்டுவார் என நம்புவோம்.
thanks dinamalar

No comments:

Post a Comment