Saturday, November 20, 2010

ஏமாற்றத்தால் வந்த மாற்றம்? திருமணத்தில் வாய் முகூர்த்தம்இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க.,வின் கழுத்துக்கு மேல் தொங்கும் கத்தியாய் இருந்தது ஸ்பெக்ட்ரம் விவகாரம். இப்போது கயிறு அறுந்துவிட்டது; ராஜா ராஜினாமா என்ற பாதிப்போடு, கத்தியால் ஏற்பட்ட காயம் முடியுமா அல்லது கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வகையில் திருப்பங்கள் நிகழுமா என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பு.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் எழுந்துள்ள சில அரசியல் நிகழ்வுகளை அலசினால், இந்த விவகாரம் தி.மு.க.,வை மட்டுமல்லாது, இதர கட்சிகளையும் ஆட்டிவைத்துள்ளதை உணர முடிகிறது. அவை:

ஏமாற்றத்தால் வந்த மாற்றம்? ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், "மத்திய அமைச்சர் ராஜாவை அமைச்சரவையில் இருந்து நீக்குவதால், அரசுக்கு ஆபத்து ஏற்படுமானால், நான் காப்பாற்றுகிறேன்' என்ற திடீர் அறிவிப்பு மூலம் ஜெ., பரபரப்பு வெடியைக் கொளுத்திப் போட்டார். இதனால், அக்கட்சி கூட்ணியில் இருந்த ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. "அ.தி.மு.க.,வின் காங்கிரஸ் ஆதரவு நிலை மக்கள் நலனை பாதுகாக்க உதவாது' என மார்க்சிஸ்ட் கட்சி அதிரடி தீர்மானத்தை நிறைவேற்றி அ.தி.மு.க., முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, இது பற்றி கருத்து எதுவும் கூறாமல் மவுனம் சாதித்து வருகிறார்.

முதலில் ராஜா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு களமிறங்கிய ஜெ., அதனால் கூட்டணியில் மாற்றம் வரும் என்று நம்பினார். இதற்கு வாய்ப்பில்லை என்ற ஏமாற்றத்தால், அ.தி.மு.க.,வின் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டது. ராஜா ராஜினாமாவிற்கு பிறகு, பா.ஜ., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு சேர்ந்து, பிரதமர் மற்றும் மத்திய அரசை குற்றஞ்சாட்டத் துவங்கியுள்ளது அ.தி.மு.க., இதன்மூலம், காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் கதவை திறந்த ஜெயலலிதாவே, தற்போது அந்தக் கதவை அடைத்து விட்டார்.

திருமணத்தில், "வாய்' முகூர்த்தம்: கடந்த 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு பின் கூட்டணியில், "பெரியண்ணனாய்' இருந்த தி.மு.க.,வுக்கு, 2009ம் ஆண்டு பெரிய சரிவு ஏற்பட்டது. மத்திய அமைச்சரவையில் கேட்ட துறைகள் கிடைக்காமல், கொடுத்ததை வாங்கிக் கொண்டு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சரிவிற்கு பிறகு, காங்கிரசை அனுசரித்து, கூட்டணியில் தொடர வேண்டி இருந்ததால், தி.மு.க.,வின் உரிமைக்குரல் ஒடுங்கிப் போனது. இளங்கோவன், கார்த்தி சிதம்பரத்தோடு, முந்தாநாள் அரசியலுக்கு வந்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா உட்பட பலரும் தங்களை சீண்டியபோதும், "கூட்டணி தர்மத்திற்காக' வாய்மூடி மவுனம் காத்தது தி.மு.க., இந்த நேரத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் இடியாய் இறங்கியது. கூட்டணியை தொடர வேண்டும் என்பதற்காக ராஜாவின் ராஜ்யம் பறிக்கப்பட்டது. அதன்பிறகும், தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற, "திக் திக்' மனதோடு இருந்த தி.மு.க.,விற்கு, மதுரையில் நடந்த மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் திருமணத்தில் பதில் கிடைத்தது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, "தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி நீடிக்கிறது' என்றார். இவரது, "வாய்' முகூர்த்தம் காரணமாக ஆளுங்கட்சியில் தற்காலிக நிம்மதி ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், சுப்பிரமணியசாமியின் கிடுக்குப்பிடி இன்னும் தொடர்வதும், பிரதமரையே பலிகடா ஆக்க எதிர்கட்சிகள் துடிப்பதும், இதன் விளைவாக காங்கிரஸ் மீண்டும் தங்களை பலியிடுமா என்ற பயத்தோடு தி.மு.க., காத்திருக்கிறது.

மிரட்டி மீன் பிடிப்பார் ராகுல்? தன் சொந்தக் கட்சியைச் சேர்ந்த சசி தரூர், சுரேஷ் கல்மாடி, அசோக் சவான் போன்றவர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானதும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வைத்தது காங்கிரஸ் தலைமை. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தி.மு.க., கூட்டணிக்காக சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்திற்கு பிரதமர் ஆளாக வேண்டிய துரதிஷ்டவசமான சூழல் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கான பலனை தமிழக சட்டசபைத் தேர்தலின் போது அறுவடை செய்ய வேண்டும் என ராகுல் முடிவு செய்துள்ளார். ஆட்சியில் பங்கு, 70 தொகுதிகள் ஒதுக்கீடு கொண்ட உடன்பாட்டுக்கு தி.மு.க.,வை ஒத்துக் கொள்ள செய்ய திட்டம் தயாராகியுள்ளது என்கின்றனர் காங்கிரசார். இந்த மிரட்டலுக்கு தி.மு.க., செவிசாய்க்கவில்லையென்றால் தே.மு.தி.க., பா.ம.க., போன்ற சில கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் புதுக் கூட்டணியை அமைக்கும். பீகார் தேர்தல் முடிவுக்கு பின், கூட்டணிக் கணக்கை ராகுல் மாற்றியமைப்பார் என்ற கருத்தும் தொடர்கிறது.(dinamalar)

No comments:

Post a Comment