Saturday, November 20, 2010

சஸ்பெண்ட் சாட்டையை கையிலெடுக்கும் ராகுல்



தமிழக இளைஞர் காங்கிரசில் புதிய படையை அமைக்க வேண்டும். அதன் மூலம் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுலின் கனவுத்திட்டம். இத்திட்டத்தை நிறைவேற்றவும், இளைஞர் காங்கிரசை பலப்படுத்தவும், கிராமம் முதல் மாநகரம் வரை ஜனநாயக ரீதியாக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடத்தப்பட்டது.



தலைவர், துணைத் தலைவர் மற்றும் 10 பொதுச்செயலர்கள் கொண்ட நிர்வாகம் அமைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட வாரியாக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை கொண்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. அதன் மூலம் அரசியல் களத்தை சந்திக்கவும் நிர்வாகிகள் தயார்படுத்தப்பட்டனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியுடன், தி.மு.க., தலைமையில் ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் காங்கிரசார் எடுத்துச் சொல்கின்றனர்.  காங்கிரஸ் ஆளாத மாநிலங்கள், எதிர்கட்சிகள் ஆட்சி நடக்கிற மாநிலங்களில் மத்திய அரசு கொடுக்கிற கோடிக்கணக்கான ரூபாய்களை கொண்டு நிறைவேற்றக் கூடிய மத்திய அரசின் திட்டங்களை காங்கிரசார் உரிமை கொண்டாட முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
அந்த வரிசையில் தமிழகமும் இடம் பிடித்துள்ளது. அதனால் தான் காங்கிரஸ் தலைவர் சோனியா வழிகாட்டுதலுடன் நடக்கிற மத்திய அரசு தான் அத்திட்டங்களை நிறைவேற்றுகிறது என்பதை தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் தோறும் மக்கள் மனதில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு இளைஞர் காங்கிரசிடம் ராகுல் ஒப்படைத்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி 130 பேர் கொண்ட பாதயாத்திரையை இளைஞர் காங்கிரசார் துவக்கினர். மாநிலத் தலைவர் யுவராஜா தலைமையில், கால்கள் வலிக்க, பாதங்கள் கொப்பளிக்க தினமும் 25 கி.மீ., தூரம் வீதம் ஏறக்குறைய 14 ஆயிரம் கி.மீ., தூரம் நடை பயணத்தை இவர்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கவுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சி வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படும் இந்த பாதயாத்திரை, ஓரிரு நாட்களில் சென்னைக்கு வரவுள்ளது. இளைஞர் காங்கிரசாரை வரவேற்க அனைத்து கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்களும் காத்திருக்கின்றனர்.இளைஞர் காங்கிரசாரின் பாதயாத்திரைக்கு கண்திருஷ்டி விழுந்தது போல், கோஷ்டி சண்டையும் ஆங்காங்கே அரங்கேறி ராகுலின் அதிருப்தியையும் இளைஞர் காங்கிரசார் சந்தித்துள்ளனர்.
இது குறித்து இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் பூத் கமிட்டிக்கு கூட ஆட்கள் கிடையாது என விமர்சனம் செய்த காலம் மலையேறி விட்டது. இளைஞர் காங்கிரசில் மட்டும் 14 லட்சம் இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். உ.பி., மாநிலத்தில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலை நடத்திய பின் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது.
அதேநிலையை தமிழகத்திலும் உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தினால் தான் ஜனநாயக ரீதியில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலை ராகுல் நடத்தினார். காங்கிரஸ் கட்சியில் ஒரு கோஷ்டி தலைவர் இன்னொரு கோஷ்டி தலைவரை விமர்சனம் செய்வது உண்டு. ஆனால், இளைஞர் காங்கிரசில் அப்படியொரு நிலை ஏற்படக் கூடாது. கோஷ்டி சண்டை நடக்கக் கூடாது என்பதிலும், கட்டுக்கோப்பான அமைப்பாக இருக்க வேண்டும் என்பதிலும் ராகுல் தீவிரமாக இருக்கிறார்.
அதனால் தான் சைதாப்பேட்டை தொகுதியில் உறுப்பினர் சேர்ப்பு விழாவில் வாசன், கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் மத்தியில் கோஷ்டி சண்டை அங்கேறியது. அதில் கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் வாசன், கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் மத்தியில் தகராறு ஏற்பட்டது.
இதில் ஒருதரப்பினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த தகராறு தொடர்பாக வாசன் ஆதரவு மாநில பொதுச்செயலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கோஷ்டி சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வாசன் அணி, கார்த்தி சிதம்பரம் அணி என்ற பாகுபாடு பார்க்காமல் சஸ்பெண்ட் நடவடிக்கையை ராகுல் எடுத்துள்ளார். கோஷ்டி சண்டைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, "சஸ்பெண்ட் சாட்டையை' ராகுல் சுழற்ற ஆரம்பித்து விட்டதால், இனி கோஷ்டி மோதல்கள் குறையும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.(dinamalar)

No comments:

Post a Comment