Monday, November 8, 2010

சக்தி வாய்ந்த நாடு இந்தியா: நெகிழ்கிறார் ஒபாமா

 ""உலகில் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்று இந்தியா. ஒட்டு மொத்த உலகிலும் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளமையை உருவாக்கவும், பயங்கரவாதம் உட்பட பல பிரச்னைகளை ஒழித்துக் கட்டவும், இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்,'' என, அதிபர் பராக் ஒபாமா கூறினார்.

டில்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய முறையில், 21 குண்டுகள் முழங்க சிகப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத், பிரதமர் மன்மோகன்சிங், அவரது மனைவி குர்ஷன் கவுர் ஆகியோர் ஒபாமாவையும் அவரின் மனைவி மிச்சேலையும் வரவேற்றனர். பின்னர் அமைச்சரவை சகாக்களையும், முப்படைத் தளபதிகளையும் அதிபர் ஒபாமாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர். அமெரிக்க மற்றும் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஒபாமா ஏற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி மாளிகை வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஒபாமா கூறியதாவது: நானும், பிரதமர் மன்மோகன் சிங்கும், நானும், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலும் மற்றும் இந்திய குழுவினரும் நடத்திய பேச்சுவார்த்தையால், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே உள்ள வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்த முடியும் என, நம்புகிறேன். இந்தியா வளர்ந்து வரும் நாடல்ல; உலகில் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்று. சர்வதேச கோட்பாடுகள், விதிகள், நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தவும், ஒட்டு மொத்த உலகிலும் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளமையை உருவாக்கவும் இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.இந்தியா ஒரு நம்பகமான நட்பு நாடு. அந்த நட்பை மேலும் வலுப்படுத்தவே நான் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளேன். இந்தியாவும், அமெரிக்காவும் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள். மிகப்பெரிய அளவில் மக்களுக்கு இடையே தொடர்பை கொண்டுள்ளன. அமெரிக்காவில் வசிக்கும் ஏராளமான இந்தியர்கள் அந்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றனர். இந்திய வாழ்க்கை முறையை அமெரிக்கர்கள் அங்கீகரிக்கவும் அவர்கள் உதவியுள்ளனர்.எனக்கும், என் மனைவிக்கும் அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பு மற்றும் உபசரிப்பு கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ந்துள்ளோம். அதற்காக ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். அமெரிக்க மக்கள் சார்பிலும் நன்றி கூறுகிறேன்.இவ்வாறு ஒபாமா கூறினார்.

குதிரை மற்றும் ஒட்டகங்களை கொண்டு செல்ல ஒபாமா ஆசை: அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு வந்ததும், அவரை ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் குதிரையில் அணிவகுத்து வந்து, வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், ஜனாதிபதி பிரதிபாவிடம் பேசிய அதிபர் ஒபாமா, குதிரையில் அணிவகுத்து வந்த பாதுகாவலர்கள் பற்றி பாராட்டிப் பேசினார். ஒட்டகங்கள் சிலவற்றையும், குதிரைகள் சிலவற்றையும் அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன் என்றும் கூறினார். இதைக் கேட்ட வி.ஐ.பி.,க்கள் உற்சாகத்தில் சிரித்தனர்.ஒபாமாவுக்கு நேற்று முன்தினம் இரவு பிரதமர் மன்மோகன் சிங் விருந்து கொடுத்த போது, ஒட்டகத்தில் வந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் 30 பேர் இசைக் கருவிகளை வாசித்தபடி, ஒபாமாவுக்கு வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்புகளில் மகிழ்ந்ததால், ஒபாமா இப்படிக் கூறினார்.(dinamalar)

No comments:

Post a Comment