பள்ளி மாணவனை கழுத்தை பிடித்து மிரட்டி இழுத்து செல்ல முயன்ற குடிபோதை ஆசாமியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர். பல்லடம் பனப்பாளைத்தைச் சேர்ந்தவர் நாகராஜ்(37); திருப்பூரில் தனியார் மொபைல் போன் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மகன் பவித்ரன்(12); பல்லடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று இரவு 7.00 மணிக்கு பவித்ரன் டைப்ரைட்டிங் வகுப்பிற்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்தார். அவனை பின் தொடர்ந்து வந்த குடிபோதை ஆசாமி ஒருவன் திடீரென பவித்ரனின் கழுத்தை ஒரு கையால் பிடித்து மற்றொரு கையால் வாயை அடைத்து வாடா என்னோடு என கூறி இழுத்து சென்றுள்ளான்.
இதனை தற்செயலாக கண்ட மாணவனின் உறவினர் கார்த்திக்(21); என்பவர் பவித்ரனை ஒருவன் கடத்துகிறான் என சத்தம் போடத்துவங்கினார்.அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பனப்பாளையத்தில் திரண்டனர். போதை ஆசாமியை பிடியில் இருந்து பவித்ரனை மீட்டபொதுமக்கள் ஆவேசத்துடன் போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்தனர். இத்தகவல் தெரிந்ததும் பல்லடம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியார் சம்பவ இடத்திற்கு சென்று போதை ஆசாமியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தார். அப்போது, போதை ஆசாமி திண்டுக்கல் மாவட்டம் தாண்டிகுடியைச் சேர்ந்த விவசாயி பாண்டித்துரை(47) என்பதும், கோவையில் உறவினர் ஒருவர் திருமணத்திற்கு சென்று விட்டு அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் நிதானம் தவறி பல்லடத்தில் இறங்கியதும் ,பின்பு மாணவன் பவித்ரனை மிரட்டி அழைத்து செல்ல முயற்சித்ததும் தெரியவந்தது.தொடர்ந்து போலீசார், பாண்டித்துரையிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மாணவனை கடத்த முயற்சி செய்து பாண்டித்துரை மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரி மாணவன் பவித்ரன் பெற்றோர் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாரிடம் முறையிட்டனர்.(dinamalar)
No comments:
Post a Comment