Friday, November 19, 2010

தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகளுக்குள் முழு நம்பிக்கை இருக்கிறது: முதல்வர்

 
"காங்கிரசுக்கும் எங்கள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது; எங்களுக்கும் காங்கிரஸ் மீது முழு நம்பிக்கை இருக்கிறது' என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை:
பார்லிமென்ட் கூட்டுக் குழு ஒன்றினை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து அமைக்க வேண்டுமென அ.தி.மு.க., உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு நீங்கள் அஞ்சுவதாகவும், அதைப் பார்த்தால், "மடியில் கனம் இருந்தால் வழியில் பயம்' என்ற பழமொழி தனக்கு ஞாபகத்திற்கு வருவதாகவும் ஜெயலலிதா அறிக்கை விடுத்திருக்கிறாரே?

தி.மு.க., தானாகவே முன்வந்து பார்லிமென்ட் கூச்சல் குழப்பமின்றி ஜனநாயக முறைப்படி இயங்க வேண்டும். மக்கள் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு நல்ல முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு அமைச்சர் ராஜாவை பதவி விலக செய்தது. அதற்கு பின், மத்திய அரசுக்கு பிரச்னை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, மீண்டும் போர்க்குரல் எழுப்பி பா.ஜ., போன்ற எதிர்க்கட்சிகளோடு சேர்ந்து கொண்டு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஜெயலலிதா எழுப்பத் துவங்கினார்.

காங்கிரஸ் மீது கருணாநிதிக்கு நம்பிக்கை இல்லை என்பது தெளிவாகிறது என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?

மத்திய அரசில் தற்போது பொதுக் கணக்கு குழுவின் தலைவராக இருப்பவர் முரளி மனோகர் ஜோஷி. அவர் பா.ஜ.,வை சேர்ந்தவர். அவர் தலைமையில் உள்ள பொதுக் கணக்கு குழு, ஸ்பெக்ட்ரம் பற்றி விசாரிக்கலாம். ஆளுங்கட்சியின் சார்பில் உள்ளவர் தலைமையில் பார்லிமென்ட் எம்.பி.,க்கள் கூட்டுக்குழு முறைப்படி அமைக்கப்பட்டதால், பின் அதைப் பற்றியும் எதிர்க்கட்சிகள் குறை கூறலாம் என்ற எண்ணத்தோடு தான் எதிர்க்கட்சியினருக்கு பா.ஜ.,வை சேர்ந்தவரும், பொதுக் கணக்கு குழுவின் தலைவருமான முரளி மனோகர் ஜோஷி மீது நம்பிக்கை இல்லையா என்று நான் கேட்டிருந்தேன். இதையொட்டி தான் ஜெயலலிதா, காங்கிரஸ் மீது கருணாநிதிக்கு நம்பிக்கை இல்லையா என்று வழக்கம் போல் சிண்டு முடியும் பணியில் ஈடுபட்டுள்ளார். பலமுறை இத்தகைய முயற்சியில் ஈடுபட்டு தோல்வியை தழுவிய நிலையிலும் மீண்டும் மீண்டும் அந்த முயற்சிலேயே ஈடுபடுகிறார். காங்கிரசுக்கும் எங்கள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது; எங்களுக்கும் காங்கிரஸ் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. பார்லிமென்ட் கூட்டுக்குழு வேண்டுமென்றே பா.ஜ., கோரிக்கையை முழு அளவிலே ஆதரித்துக் கொண்டே காங்கிரஸ் கட்சிக்கும் ஜெயலலிதா விரிக்கும் மாயவலையைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் யாரும் இல்லை.

தி.மு.க.,வை மீண்டும் ஆட்சிக்கு வர விடமாட்டேன் என்று ஒரு கட்சியின் தலைவர் சவால் விட்டிருக்கிறாரே?

எந்த திரைப்படத்தில்?.

எம்.பி.,க்களைக் கொண்ட கூட்டுக்குழுவிற்கு அனுப்ப வேண்டுமென்று கோருகின்றனரே?

ராஜா பதவி விலகிய பின், தணிக்கை குழு அறிக்கையை எம்.பி.,க்கள் கொண்ட கூட்டுக்குழு விசாரிக்கும் என்று அரசின் சார்பில் அறிவித்திருந்ததால், எதிர்க்கட்சியினர் அதை ஏற்க மாட்டோம்; எங்கள் பா.ஜ.,வைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொதுக் கணக்கு குழுவின் விசாரணைக்கு தான் அனுப்ப வேண்டும். அவர் அந்த விசாரணையை நடத்தக்கூடாது என்பதற்காகவே எம்.பி.,க்களை கொண்ட கூட்டுக் குழுவிற்கு அனுப்புகிறீர்கள். அதை ஏற்கும் வரை பார்லிமென்டை நடத்த விட மாட்டோம் என்று சொல்லியிருப்பார்களோ என்னவோ? ஏதோ ஒரு காரணம் வேண்டுமே, பார்லிமென்டை ஸ்தம்பிக்க செய்வதற்கு. என்ன செய்வது, ஞானசூரியனின் சூடுபட்ட பிறகாவது தமிழர்களுக்கு சுயமரியாதை உணர்வு வருமா? இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.(dinamalar)

No comments:

Post a Comment