Wednesday, November 17, 2010

தொடரும் பிரச்னைகளால் மத்திய அரசு திணறல் : சுப்ரீம் கோர்ட் கண்டனத்துக்கும் பிரதமர் மவுனம்

 ""2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பிரச்னையில், ராஜா மீது வழக்கு தொடர அனுமதி வழங்காதது குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக, சுப்ரீம் கோர்ட் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. இதற்கு, பிரதமர் உடனடியாக பதிலளிக்க வேண்டும்,'' என, பா.ஜ., உட்பட, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. தொடர்ந்து இன்று பார்லிமென்ட் சுமுகமாக நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இப்பிரச்னையை அரசு எப்படி  கையாளப்போகிறது, அடுத்தது என்ன என்பது, தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்.

கடந்த சில நாட்களாக, ஸ்பெக்ட்ரம் விவகாரம் பேசப்பட்டாலும், அமைச்சர் ராஜாவின் ராஜினாமா, அதற்குப் பின் கணக்குத் தணிக்கைத்துறை வெளியிட்ட தகவல்கள், தொடர்ந்து பிரதமர் நடவடிக்கை எடுக்காமல் தாமதித்தது பற்றி, சுப்ரீம் கோர்ட் எழுப்பிய கேள்வி, இன்று பிரமாண்டமாக உருவெடுத்திருக்கிறது.மத்திய அரசு, கூட்டணி தர்மத்திற்காக, சில விஷயங்களை விட்டுக் கொடுத்தாலும், ஸ்பெக்ட்ரம் ஊழலில் பயனடைந்தவர் யார் என்ற கேள்வி இப்போது நாட்டையே உலுக்கி வருகிறது.

இந்நிலையில், பீகாரில் கடைசி கட்டத் தேர்தலுக்கு பிரசாரம் செய்ய வந்த அத்வானி, பாட்னாவில் நிருபர்களிடம் கூறியதாவது: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பிரச்னையில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, மத்திய அமைச்சராக இருந்த ராஜா மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு, சுப்பிரமணியசாமி மனு செய்திருந்தார். இதன்மீது முடிவு எடுப்பதில், பிரதமர் மன்மோகன் சிங் நீண்ட காலதாமதம் செய்தது ஏன் என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. என், 60 ஆண்டுகால பார்லிமென்ட் வரலாற்றில், சுப்ரீம் கோர்ட் இதுபோன்ற ஒரு கேள்வியை இதற்கு முன் எழுப்பியதாக எனக்குத் தெரியவில்லை. எனவே, சுப்ரீம் கோர்ட்டின் கேள்விக்கு பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதிலளிக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என, நாங்கள் கோரி வருகிறோம். அது குறித்தும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். நாட்டிலிருந்து, ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். பார்லிமென்டின் கடந்த இரண்டு கூட்டத் தொடரின் போது, விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் குறித்து நாங்கள் பிரச்னை எழுப்பினோம். அதனால், அரசு அதுபற்றி விவாதம் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவானது.இவ்வாறு அத்வானி கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாமியின் கோரிக்கை மீது முடிவு எடுக்காமல், 11 மாதம் காலதாமதம் செய்தது ஏன் என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியதில் எந்தத் தவறும் இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட மறுத்தது ஏன் என்றும் பிரதமரிடம் கோர்ட் கேள்வி எழுப்ப வேண்டும்."ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, 2008ல், பிரதமர் மன்மோகனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ராஜ்யசபா தலைவர் சீதாராம் யெச்சூரியும் கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கும் பதில் இல்லை.ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஆடிட்டர் ஜெனரல் அளித்த அறிக்கை, மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக என்ன சந்தேகம் நிலவியதோ, அதை உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இப்பிரச்னை தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ராஜா மீது மட்டுமின்றி, தவறு செய்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஸ்பெக்ட்ரம் வழக்கில் அதிகமாக ஈடுபட்ட சுப்பிரமணியசாமி, பிரதமருக்கு நேற்று எழுதிய கடிதத்தில், "ராஜினாமா செய்த ராஜா உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற தகவல் எனக்கு வந்திருக்கிறது, அதனால், அவருக்கு அதிகபட்ச பாதுகாப்பு தரவேண்டும்' என, குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.இன்று பார்லிமென்டின் இரு சபைகளிலும் எழும் பிரச்னைகளை அரசு எப்படி கையாளும் என்பது பற்றி  முடிவு தெரியவில்லை. ஆனால், சுப்ரீம் கோர்ட் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிப்பார் என்று மட்டும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

பிரதமருக்கு தர்மசங்கடமா? ""ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் நீண்ட நாட்களாக மவுனம் காத்தது ஏன்? என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியதால், பிரதமர் மன்மோகனுக்கு எவ்விதமான தர்மசங்கடமான நிலையும் ஏற்படவில்லை,'' என, சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.ஸ்பெக்ட்ரம் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நாளை (இன்று) நடக்கும் போது, நான் ஆஜராவேன் என்றும் அவர் தெரிவித்தார்.(dinamalar) 

No comments:

Post a Comment