Thursday, December 16, 2010

தே.மு.தி.க., தலைவர் கூறியதை நாங்கள் வரவேற்கிறோம்

""வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியதை, நாங்கள் வரவேற்கிறோம்; அதே கருத்தை நாங்கள் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம்,'' என, பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருவண்ணாமலையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை உயர்த்தி கொள்ளலாம் என்ற அதிகாரத்தை, மத்திய அரசு வழங்கியதன் விளைவாக, கடந்தாண்டு எட்டு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து வரும் வாரம், தமிழகம் முழுவதும் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது."ஸ்பெக்ட்ரம்' ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய, மாநில அரசுகள் கண் துடைப்பு நாடகம் நடத்துகின்றன. பிக்பாக்கெட் அடிப்பவர்களை கடுமையாக தண்டிக்கும் சட்டம், நாட்டின் பணத்தை கொள்ளையடித்த ராஜாவை கவுரமாக நடத்த வேண்டும் என, தி.மு.க., கூறியிருப்பது கேலிக்குரியது.முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, நீதித்துறையிலும் குறுக்கிட்டு செயல்பட்டுள்ளார். எனவே, அவரை கைது செய்ய வேண்டும். பெரம்பலூரில் 60 தலித் குடும்பங்களின் நிலங்களை, அதிகார துஷ்பிரயோகம் செய்து, ராஜாவுக்கு சொந்தமான நிறுவனங்கள் சார்பில் பறிக்கப்பட்டுள்ளது.

"ராஜா தலித் என்பதால் தான், "ஸ்பெக்ட்ரம்' ஊழலில் சிக்க வைக்க முயல்கின்றனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியது கண்டிக்கத்தக்கது. அதை அவர் திரும்ப பெற வேண்டும். வேறு யாராவது இதுபோன்று கூறியிருந்தால், பா.ஜ., மன்னிப்பு கேட்க கோரி, போராட்டம் நடத்தியிருக்கும். அவர் மூத்த தலைவர் என்பதால் தான், அதை திரும்ப பெற வேண்டும் என்று கூறுகிறோம்."வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும்; அதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டும்' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதை நாங்கள் வரவேற்கிறோம்; அதே கருத்தை நாங்கள் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம்.வரும் 28ம் தேதி, தமிழக தேர்தல் நிலவரம் குறித்து பேச தமிழகத்தை சேர்ந்த பா.ஜ., முக்கிய பிரமுகர்கள் குழு, டில்லி சென்று அத்வானி மற்றும் நிதின் கட்காரியை சந்தித்து பேச உள்ளோம்.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.(dinamalar)

No comments:

Post a Comment