Monday, December 13, 2010

ஆதரவு

"இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் தன்ராஜ் பிள்ளை பொருத்தமான தேர்வாக இருக்கும்,' என, இந்திய வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஜோஸ் பிராசாவின் பதவிக்காலம் முடிந்தது. இதனால் "ஹாக்கி இந்தியா' அமைப்பு, புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது. இதற்கு ""நான் பொருத்தமாக இருப்பேன்,'' என்று இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை வெளிப்படையாக அறிவித்தார்.
இதற்கு இந்திய ஹாக்கி வீரர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நடுகள வீரர் அர்ஜுன் ஹாலப்பா கூறுகையில்,"" தன்ராஜ் பிள்ளை ஹாக்கி விளையாடியதைப் பார்த்து நாங்கள் வளர்ந்தோம். அவர் தான் எங்களுக்கு ரோல் மாடல். எங்களுக்கு என்ன வேண்டும் என, மற்றவர்களை விட அவருக்கு நன்றாகத் தெரியும். தற்போதும் ஹாக்கி விளையாடி வரும் தன்ராஜ் பிள்ளைக்கு, நவீன யுக்திகள் குறித்து நன்கு தெரியும். பயிற்சியாளர் பதவிக்கு அவர் பொருத்தமாக இருப்பார்,'' என்றார்.
நன்கு தெரியும்:
மற்றொரு வீரர் தனஞ்செய் மகாதிக் கூறுகையில்,"" எந்தவொரு முன்னாள் வீரர் பயிற்சியாளராக வந்தாலும், அது அணிக்கு நன்மைதான். ஏனெனில் நெருக்கடிகள் குறித்து அவர்களுக்கு நன்கு தெரியும். தன்ராஜ் பிள்ளையாக இருந்தால், எங்களது தேவைகளை மறைக்காமல் சொல்வோம். இதேபோல, முன்னாள் இந்திய வீரர் ஜூடே பெலிக்சும் இப்பதவிக்கு பொருத்தமாக இருப்பார்,'' என்றார்.
வாய்ப்பு கொடுக்கலாம்:
பெயர் தெரிவிக்க விரும்பாத மற்றொரு வீரர் கூறுகையில்,"" 2009 அஸ்லான்ஷா மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில், மானேஜராக தன்ராஜ் பிள்ளை சிறப்பாக செயல்பட்டார். வீரர்களும் மகிழ்ச்சியாக இருந்தனர். பயிற்சியாளராகும் விருப்பத்தை இவர் மட்டும் தான் தெரிவித்துள்ளார். இதில் சிறப்பாக செயல்படுவார் என்பது <உறுதி. ஏனெனில், இந்திய ஹாக்கியின் சிறந்த, மோசமான காலங்களை நன்கு உணர்ந்தவர். தவிர, நமது வீரர்கள் மற்றும் சூழ்நிலைகள் பற்றி அதிகம் அறிந்தவர். இதனால் அவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்,'' என்றார்.
ராஜ்பால் எதிர்ப்பு:
இந்திய அணி கேப்டன் ராஜ்பால் சிங் கூறுகையில்,"" எவ்வித நோக்கமும் இன்றி பயிற்சியாளரை தேர்வு செய்வற்குப் பதில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) போல, பலபேரிடம் இருந்து விண்ணப்பங்களை பெறலாம். இந்தியா அல்லது வெளிநாடு என யாராக இருந்தாலும், திறமையின் அடிப்படையில் தேர்வுசெய்யலாம். என்னைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய பயிற்சியாருக்கு முன்னுரிமை கொடுப்பேன்,'' என்றார்.
ஆசிய ஹாக்கி அணியில் சந்தீப்
ஆசிய ஹாக்கி அணியில் சந்தீப் சிங், ராஜ்பால் சிங் உள்ளிட்ட 6 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர். ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து, "ஆசியன் ஆல் ஸ்டார்' ஹாக்கி அணியை ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு தேர்வு செய்தது. இதில் இந்தியா சார்பில் ஆண்கள் பிரிவில் சந்தீப் சிங், கேப்டன் ராஜ்பால் சிங், அர்ஜுன் ஹாலப்பா, குர்பாஜ் சிங் ஆகியோரும், பெண்கள் பிரிவில் ஜாய்தீப் கவுர், ராணி ராம்பால் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல பாகிஸ்தான் சார்பில் ரஷித் முகமது, ரேகன் பட், சல்மான் அக்பர் உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.(DINAMALAR)

No comments:

Post a Comment