Thursday, December 16, 2010

உச்ச நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் ஸ்பெக்ட்ரம் விசாரணை!




  2ஜி அலைக்கற்றை ஊழல் புகார் குறித்து உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வியாழக்கிழமை உத்தரவிட்டனர்.மேலும் பாஜக ஆட்சி நடைபெற்ற 2001-ம் ஆண்டிலிருந்து விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணையை முடித்து, வரும் பிப்ரவரி 10-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் காலக்கெடு நிர்ணயித்தனர்.அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு என்பதை துல்லியமாகத் தெரிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெரும் அளவு ஊழல் நடந்துள்ளது. எனவே இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று "பொது நல வழக்கு மையம்' என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதோடு, தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ராசா மீது வழக்கு தொடர பிரதமர் மன்மோகன் சிங் அனுமதி தரவில்லை என்று கூறி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் புகார் குறித்து நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச்  விசாரித்தது.விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அதுபோல் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையகமும் அறிக்கை அளித்தது.தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக அமைந்தது. தணிக்கை அறிக்கையை தொடர்ந்து, தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ. ராசா பதவி விலகினார்.அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக நாளும் புதுப் புது தகவல்கள் வந்த நிலையில், விசாரணையை தீவிரப்படுத்துமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தனர்.இந்த நிலையில்,வழக்கில் உள்ள அம்சங்களை ஆய்வு செய்த நீதிபதிகள் தணிக்கை அறிக்கை மற்றும் மத்திய கண்காணிப்பு ஆணையக விசாரணை அறிக்கையின் மூலம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதற்கான அடிப்படை ஆதாரம் உள்ளது என்ற முடிவுக்கு வந்தனர்.இதையடுத்து இந்த வழக்கில் பல்வேறு உத்தரவுகளை நீதிபதிகள் வியாழக்கிழமை பிறப்பித்தனர்.அதன் விவரம்: அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து 2001-ம் ஆண்டிலிருந்து (பாஜக ஆட்சியிலிருந்து) 2008 வரை விசாரிக்க வேண்டும்.விசாரணையை சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் உச்ச நீதிமன்ற மேற்பார்வையில்தான் நடத்த வேண்டும்.சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் விசாரணையை முடித்து வரும் பிப்ரவரி 10-ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்  செய்ய வேண்டும்.அலைக்கற்றை முறைகேட்டால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு என்பது துல்லியமாக கணக்கிட வேண்டும்.ஊழல் கண்காணிப்பு ஆணையக அறிக்கை மற்றும் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணையை மேற்கொள்ள வேண்டும். மத்திய கண்காணிப்பு ஆணையகம் மற்றும் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களை பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும்.தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் கொடுக்கப்பட்டது எப்படி என்பதை விசாரிக்க வேண்டும். தகுதி இல்லா நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது குறித்து தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.சிடிஎம்ஏ மற்றும் ஜிஎஸ்எம் இரட்டை தொழில்நுட்ப மாற்றம் குறித்து விசாரிக்க வேண்டும். அதுபோல் இரட்டை தொழில்நுட்ப அனுமதி குறித்த அறிவிப்பு 2007 அக்டோபர் 19-ல் வெளியான நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக ஒரு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்தும் விசாரிக்க வேண்டும். அதுபோல் அலைக்கற்றை ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்புள்ளது என்ற ஊகத்தின் அடிப்படையில் பல நிறுவனங்களுக்கு அரசுத்துறை வங்கிகள் பெரும் அளவில் கடன் வழங்கி உள்ளது குறித்து விசாரிக்க வேண்டும்.எந்தவொரு நபர் அல்லது அமைப்பின் தலையீட்டுக்கும் சிபிஐ இடம் கொடுக்க கூடாது.அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அரசியல் தரகர் நீரா ராடியாவுக்கும் மற்றவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பதிவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
  1. 2001-ம் ஆண்டிலிருந்து (பாஜக ஆட்சியிலிருந்து) 2008 வரை விசாரிக்க வேண்டும்.
  2. பிப்ரவரி 10-ம் தேதி விசாரணை அறிக்கையை தாக்கல்  செய்ய வேண்டும்.
  3. அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு என்பதை துல்லியமாக கணக்கிட வேண்டும்.
  4. தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் கொடுக்கப்பட்டது எப்படி என்பதை விசாரிக்க வேண்டும்.
  5. இரட்டை தொழில்நுட்ப அனுமதி குறித்த அறிவிப்பு 2007 அக்டோபர் 19-ல் வெளியான நிலையில் அதற்கு ஒரு நாள் முன்னதாக ஒரு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து விசாரிக்க வேண்டும்.
  6. அலைக்கற்றை ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்புள்ளது என்ற ஊகத்தின் அடிப்படையில் பல நிறுவனங்களுக்கு அரசுத்துறை வங்கிகள் பெரும் அளவில் கடன் வழங்கி உள்ளது குறித்து விசாரிக்க வேண்டும்.
  7. தனி நபர் அல்லது அமைப்பின் தலையீட்டுக்கு சிபிஐ இடம் கொடுக்க கூடாது.
  8. நீரா ராடியாவுக்கும் மற்றவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பதிவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.(dinamani)

No comments:

Post a Comment