Sunday, December 18, 2011

ஜனவரி 1ம் தேதி முதல் சிறை நிரப்புவோம்

 லோக்பால் சட்டத்துக்கு தெளிவான முடிவு இல்லையென்றால்,  ஜனவரி 1ம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார். ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவுக்கு வலு சேர்க்கும் வகையில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில், தமிழக மக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில் அன்னா ஹசாரே நேற்று சென்னை வந்தார். பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில்
இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

இளைஞர்களின் சக்தி தேசத்தின் சக்தி. நாம் வரும் போது எதுவும் கொண்டு வரவில்லை, போகும் போதும் எதையும் கொண்டு போவது கிடையாது. அதனால், மற்றவர்களின் பொருளுக்கு ஆசைப்பட கூடாது. எனக்கு 25 வயதாக இருக்கும்போது வாழ்க்கை வெறுத்து போனது. எதற்காக வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் பிறகுதான் தொண்டு செய்வதே வாழ்க்கை என்று புரிந்து கொண்டேன்.

கடந்த 35 ஆண்டுகளாக என் உறவினர்களை நான் பார்த்தது கிடையாது. தட்டு, பாய் மட்டும் தான் என்னிடம் உள்ளது. தற்போது ஊழல் கும்பலுடன் போராடி கொண்டிருக்கிறேன். அதனால்தான் 6 மந்திரிகளை வீட்டுக்கு அனுப்ப முடிந்தது. இளைஞர்கள் நினைத்தால் தவறு செய்யும் எவ்வளவு மந்திரிகளையும் வீட்டுக்கு அனுப்ப முடியும். லஞ்சத்துக்கு எதிராக மட்டும் நான் போராடவில்லை. கிராமங்களை முன்னேற்றம் அடைய செய்வதற்கு இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன்.

நம் நாட்டு வளர்ச்சிக்கு தடையாக உள்ள ஊழலை ஒழிக்க வேண்டும். இளைஞர்களால் அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இளைஞர்கள் தமிழ்நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நல்ல ஒழுக்கம், நல்ல எண்ணம், தியாகம் செய்யும் நிலை போன்றவை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

ஜன் லோக்பால் சட்டம் நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் எனக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஜன் லோக்பால் சட்டம் வரும் போது ஒவ்வொரு மாநிலங்களிலும் லோக் அயுக்தா அமைப்பு ஏற்படும். ஜன் லோக்பால் சட்டத்துக்காக வரும் 27ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடைபெறும். நீங்களும் ஒவ்வொரு கிராமத்திலும் போராட தயாராக இருக்க வேண்டும். 27ம் தேதிக்கு பிறகு தெளிவான முடிவு இல்லையென்றால், அதாவது, ஜனவரி 1ம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும். சிறைக்கு செல்வது என்பது அழகான ஆபரணம். தங்கம், வெள்ளி மட்டும் அணிவது ஆபரணம் அல்ல. தேவைப்பட்டால் சிறையில் இடம் இல்லாத அளவுக்கு சிறையை நிரப்ப தயாராக இருக்க வேண்டும்.

 சிறையில் நல்ல சாப்பாடு கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நான் பிரம்மச்சாரியாக இருக்கிறேன். தற்போது பாரதம் எனக்கு குடும்பமாக உள்ளது. நான் திருமணம் செய்யாததால்தான் இளைஞர்கள் என் குடும்பத்தில் சேர்ந்துள்ளனர். நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள். 1 அல்லது 2 குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள். குறைந்தபட்சம் 4 மணி நேரமாவது சமுதாயத்துக்காக தியாகங்களை செய்யுங்கள். அப்போது தான் நாடு முன்னேறும். எனக்கு 74 வயதாகி விட்டது, ஒரு தடவை கூட களங்கத்தை ஏற்படுத்துவதற்கு வழி கொடுக்கவில்லை. அதனால்தான் குண்டர்களை மேய்க்க முடிகிறது. 

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை பணியாற்றும் அரசு ஊழியர்களை ஜன் லோக்பால் சட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்று கூறினேன். ஆனால், மத்திய அரசு நிறைவேற்றவில்லை. மேலும், சி, டி பிரிவு மற்றும் சிபிஐ அதிகாரிகளையும் அதில் சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்தினேன். அதையும் ஏற்று கொள்ளவில்லை. சிபிஐ மத்திய அரசு கட்டுப்பாட் டில் உள்ளதால் சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை. ஜன் லோக்பால் சட்டத்தில் கொண்டு வந்தால் சிபிஐ சுதந்திரமாக செயல்படும். இந்தியாவில் ஊழலற்ற நிலையை உருவாக்கும் வரை தொடர்ந்து போராடுவேன். இவ்வாறு அன்னா ஹசாரே பேசினார்.

முன்னதாக, ஊழலுக்கு எதிராக முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடி, கர்நாடகா மாநில லோக் அயுக்தா அமைப்பின் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே ஆகியோர் பேசினர். கூட்டம் முடிந்ததும் அன்னா ஹசாரே அளித்த பேட்டியில், ‘வலுவான லோக்பால் சட்டத்தை கொண்டு வருவதாக 4 முறை மத்திய அரசு ஏமாற்றியுள்ளது. வலுவான லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை மேலும் நீட்டிக்க வேண்டும்Õ என்றார்.

இன்று  லோக்பால் தாக்கல்?

* லோக்பால் மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
* நேற்று அமைச்சரவை இறுதி வடிவம் கொடுப்பதாக இருந்தது.ஆனால், இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
* லோக்பால் மசோதா இன்று தாக்கலாவதை லோக்சபாவில் பார்வையாளர் கேலரியில் இருந்து அன்னா ஹசாரே  பார்க்கிறார். 
* இதற்காக ஐதராபாத் விழாவை ரத்து செய்து விட்டு, டெல்லி பறந்தார்.(dinakaran)

No comments:

Post a Comment