Saturday, November 6, 2010

தே.மு.தி.க., வரவுக்கு கம்யூனிஸ்ட் வேட்டு: அ.தி.மு.க., தொண்டர்கள் அதிர்ச்சி


"தே.மு.தி.க.,வை, எப்படியாவது அ.தி.மு.க., கூட்டணிக்குள் ஜெயலலிதா கொண்டு வந்து விடுவார். அப்படி வந்துவிட்டால் கூட்டணி பலம் பெறும்' என, அக்கட்சித் தொண்டர்கள் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர்.  ஆனால், கூட்டணிக்குள் தே.மு.தி.க., நுழைவதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் இப்போதே முட்டுக்கட்டை போட ஆரம்பித்து விட்டன. "தே.மு.தி.க., பக்குவப்படாத கட்சி' என, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு சாடியுள்ளார்.

சட்டசபை தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் இப்போதே ஆளாளுக்கு கூட்டணி கணக்கை துவக்கியுள்ளனர். பலமான கூட்டணியே, வெற்றி வாய்ப்பை முடிவு செய்யும் என்பதால், கூட்டணியை வலுப்படுத்துவதற்கான வேலைகளில் பல்வேறு தலைவர்கள் இறங்கியுள்ளனர். அ.தி.மு.க., கூட்டணியில் தற்போது ம.தி.மு.க.,வும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இருக்கின்றன. உபரியாக, பல்வேறு அமைப்புகளும் பெயரளவில் அக்கூட்டணியில் இருந்து கொண்டிருக்கின்றன.  இந்த கூட்டணிக்குள், காங்கிரஸ் கட்சியும், தே.மு.தி.க.,வும் வர வேண்டும் என, அ.தி.மு.க., தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கு தகுந்தாற்போல், சமீபத்தில் மதுரையில் நடந்த கூட்டத்தில், கூட்டணி தொடர்பாக குட்டிக்கதை மூலம், பல்வேறு கருத்துக்களை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் வருகிறதோ இல்லையோ, குறைந்தபட்சம் தே.மு.தி.க.,வையாவது கூட்டணிக்குள் ஜெயலலிதா இழுத்துவிடுவார் என, அக்கட்சித் தொண்டர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இவர்களின் நம்பிக்கையை தவிடுபொடியாக்கும் வகையில், தே.மு.தி.க.,வை கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
சமீபத்தில், கோவைக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார். அதில், "தே.மு.தி.க., அரசியல் பக்குவம் இல்லாத கட்சி' என சாடினார்.

அவரது பேட்டி: தே.மு.தி.க., பக்குவப்படாத கட்சி. அக்கட்சியுடன் மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்புகள் கிடையாது. நாங்கள் எப்போதும் பணத்தை பார்த்து பேசுபவர்கள் கிடையாது. எங்களுடன் ஒத்த கொள்கையுடைய கட்சியோடு நாங்கள் கூட்டணி வைப்போம்.  எங்கள் கொள்கைக்கு எதிர்மறையான கொள்கைகளை கொண்ட கட்சியாக தற்போது தி.மு.க., இருக்கிறது. தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கிறோம். வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பா.ஜ.,- காங்., கட்சி அல்லாத கட்சியுடன் தான் எங்கள் கூட்டணி இருக்கும். யூகம், கற்பனையின் அடிப்படையில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்க முடியாது. காவிரி நதிநீர் பிரச்னையில் வழங்கப்பட்ட தீர்ப்பை, மூன்று ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை.  இப்பிரச்னையில், மத்திய அரசு தலையிடாமல் வேடிக்கை பார்க்கிறது. பிரச்னையை, கர்நாடக அரசு தட்டிக் கழிக்கிறது. இரண்டையும் தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறதே தவிர, தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசை வற்புறுத்துவதில்லை. இவ்வாறு நல்லகண்ணு கூறினார்.

தே.மு.தி.க., வரவுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், நல்லகண்ணு பேசியிருப்பது, அ.தி.மு.க., தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஜெயலலிதா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் நடவடிக்கை இடையூறாக அமையும் என்றும் கருதுகின்றனர்.(dinamalar)

No comments:

Post a Comment