Friday, December 31, 2010

டெஸ்ட் தொடரை வெல்வோம்: லட்சுமண்

""தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற அரிய வாய்ப்பு காத்திருக்கிறது. இந்திய அணி தனது திறமைக்கு ஏற்ப விளையாடினால், நிச்சயமாக சாதிக்கலாம்,''என, லட்சுமண் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. டர்பனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் லட்சுமண் பேட்டிங்கில் கைகொடுக்க, 87 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதையடுத்து டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என சமமாக உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, நாளை கேப்டவுனில் துவங்குகிறது.
இதுகுறித்து லட்சுமண் கூறியது:
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியடைந்தது பெரும் ஏமாற்றத்தை தந்தது. இதன் இரண்டு இன்னிங்சிலும் அதிக ரன்கள் எடுக்க நினைத்திருந்தேன். ஆனால் இரண்டு முறையும் மோசமாக அவுட்டானது, வருத்தமாக இருந்தது. இதனால் டர்பனில் எப்படியும் சாதிக்க நினைத்திருந்தேன். இதற்கேற்ப சிறப்பாக விளையாடினேன்.
நழுவிய சதம்:
இந்த போட்டியில் சதம் அடித்து இருந்தால் அதிக மகிழ்ச்சி இருந்திருக்கும். ஆனால், சதத்தை நழுவவிட்டது, தனிப்பட்ட முறையில் பெரும் ஏமாற்றமாக இருந்தது. பொதுவாக டெஸ்ட் போட்டிகளில், இதுவரை 49 அரைசதம் அடித்துள்ள நான், இவற்றில் 16ஐ மட்டுமே சதமாக மாற்றியுள்ளேன். அதேநேரம், அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்டு, வெற்றிக்கு அழைத்துச் சென்றது உற்சாகமாக உள்ளது.
ஆரம்ப அனுபவம்:
கடந்த ஆண்டுகளில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய போது, எனது பேட்டிங் தான் அணிக்கு முதுகெலும்பாக இருக்கும். இதில் சாதித்து, பல போட்டிகளில் நெருக்கடியான நேரங்களில் எல்லாம், அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளேன். இந்த அனுபவம் தான் தற்போது, அதிகம் கைகொடுக்கிறது. இந்திய அணி நெருக்கடியான கட்டத்தில் இருக்கும் போதெல்லாம், சிறப்பாக செயல்பட்டுள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
உற்சாக வெற்றி:
டர்பன் வெற்றி, மற்ற அன்னிய மண்ணில் பெற்ற வெற்றிகளை விட அதிக மகிழ்ச்சி தருகிறது. ஏனெனில் இங்குள்ள ஆடுகளங்கள், பொதுவாக பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும். பந்துகள் அளவுக்கு அதிகமாக "பவுன்ஸ்' ஆகும். இந்த மைதானத்தில் தென் ஆப்ரிக்க அணி, எப்போதுமே எதிரணிக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கு வென்றது, எங்களுக்கு அளவு கடந்த உற்சாகத்தை தந்தது.
தொடர் வாய்ப்பு:
முன்பெல்லாம் வெளிநாடு செல்லும் போது, நல்ல மனநிலை இருக்காது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. இது கடந்த 2001 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தான் துவங்கியது எனலாம். இந்த 10 ஆண்டுகளாக, அன்னிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான வெற்றிகள் பெறுவதுடன், தொடரையும் வென்றுள்ளது. அது போல, தற்போது தென் ஆப்ரிக்காவிலும் தொடரை வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரியாக செய்வது தான் தற்போதைய நோக்கம்.
இவ்வாறு லட்சுமண் கூறினார்.

வெற்றி நாயகன்
இக்கட்டான நேரங்களில் எல்லாம், இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங்கில் அசத்தி, இந்திய அணிக்கு வெற்றி தேடித் தருபவர் லட்சுமண். இந்த ஆண்டு லட்சுமண் அசத்திய, சில போட்டிகளின் முடிவுகள்:
ரன்கள்    எதிரணி    இடம்     முடிவு
1. 103*    இலங்கை    கொழும்பு    இந்தியா வெற்றி (5 விக்.,)
2. 73*    ஆஸ்திரேலியா    மொகாலி    இந்தியா வெற்றி (1 விக்.,)
3. 91    நியூசிலாந்து    ஆமதாபாத்    டிரா
4. 96    தென் ஆப்ரிக்கா    டர்பன்    இந்தியா வெற்றி (87 ரன்கள்)

ஆடுகளம் எப்படி?
மூன்றாவது டெஸ்ட் நடக்கவுள்ள கேப்டவுன், நியூலாண்ட்ஸ் மைதானத்தின் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என அதன் பராமரிப்பாளர் ஈவன் பிளின்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இவர் கூறுகையில், ""கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் பவுலர்களுக்கு சாதகமாக அமைந்தது. ஆனால் நியூலாண்ட்ஸ் மைதானத்தின் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு அதிகம் கைகொடுக்கும். இம்மைதானத்தில் வீசப்படும் பவுன்சர்கள், பேட்ஸ்மேன்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. முதல் மூன்று நாட்கள் பேட்ஸ்மேன்களுக்கு அதிகம் ஒத்துழைக்கும். பின் 4வது மற்றும் 5ம் நாள் ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் சாதிக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

இம்மைதானத்தில் இதுவரை
நியூலாண்ட்ஸ் மைதானத்தில் தென் ஆப்ரிக்க அணி 45 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் 17 போட்டியில் வெற்றி பெற்றது.
* இந்திய-தென் ஆப்ரிக்க அணிகள், இங்கு 3 டெஸ்டில் விளையாடி உள்ளன. இதில் தென் ஆப்ரிக்கா 2 போட்டியில் வெற்றி கண்டது. ஒரு போட்டி "டிரா' ஆனது. கடந்த 2007ல் இங்கு நடந்த போட்டியில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றது.
* இங்கு இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 414 (2007). தென் ஆப்ரிக்க அணியின் அதிக பட்ச ஸ்கோர் 651 (எதிர்-ஆஸ்திரேலியா, 2009). இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்ரிக்க அணியின் அதிக பட்ச ஸ்கோர் 529/7 ("டிக்ளேர்', 1997).

No comments:

Post a Comment