Wednesday, December 8, 2010

உறவை வெட்டினால் தி.மு.க., வுக்கு நஷ்டம் : இளங்கோவன் பேட்டி



:""உறவை வெட்டினால் தி.மு.க., வுக்குத்தான் நஷ்டம். தேர்தலின் போது யாருக்கு நஷ்டம், யாருக்கு லாபம் என தெரிய வரும்,'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.

வேலூரில் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் நடந்துள்ள பல்வேறு முறைகேடுகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, திருவான்மியூர் வீட்டு வசதி வாரியத்தில் வீடுகள் சட்டத்திற்கு புறம்பாக ஒதுக்கப்பட்டுள்ளன. நடுத்தர மக்களின் நலனுக்காக, வீட்டு வசதி திட்டங்கள் தீட்டப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. அந்த திட்டங்கள் கைவிடப்படும் போது, கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும். காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒருவர் வீட்டில் புகுந்து, அவரை வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டு அந்த இடத்தை வீட்டு வசதி வாரியம் எடுப்பதாக கூறி அபரித்துள்ளனர். முதல்வரின் அதிகாரியான ராஜமாணிக்கம் மேற்பார்வையில் இது நடந்துள்ளது.

அந்த இடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வின் பரம்பரை சொத்து. இது போன்ற முறைகேடுகளுக்கு ராஜமாணிக்கம்தான் பொறுப்பு. தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாராஷ்டிராவில் இது போன்ற குற்றச்சாட்டு எழுந்த போது அந்த மாநில முதல்வர் பதவி விலகினார்.ஆனால், கர்நாடகாவில் எடையூரப்பா மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் பதவி விலகவில்லை. தமிழகத்திலும் தற்போது வீட்டு வசதி வாரியத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து முதல்வர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.

வேலூரில், முதல்வர் பேசும் போது, "உறவை வெட்டிக் கொண்டால் வெட்டி விடுபவர்களுக்குத்தான் நஷ்டம்' என்று கூறியுள்ளார். காங்கிரஸ் உடனான உறவை வெட்டினால் தி.மு.க., வுக்குத்தான் நஷ்டம். தேர்தலின் போது யாருக்கு நஷ்டம், யாருக்கு லாபம் என தெரிய வரும்.பீகாரில் லல்லுவின் அராஜகத்திற்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். கடந்த தேர்தலை விட காங்கிரசுக்கு 4 சதவித வாக்குகள் கூடுதலாக கிடைத்துள்ளது. எதிர் காலத்தில் பீகாரில் நிதிஷ்குமார் கட்சியும், காங்கிரஸ் மட்டும்தான் இருக்கும்.தொலை தொடர்பு ஊழலில் சம்மந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ராசா வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

மனோகர் ஜோஷி தலைமையிலான குழுவும் விசாரணை துவங்கிய பின், எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் தடுப்பது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல.ஸ்பெக்ட்ரம் ஊழலை ஒருவரே செய்திருக்க முடியாது என, தமிழக முதல்வர் கூறுகிறார். இந்த ஊழலில் யார் யார் சேர்ந்திருக்கின்றனர் என்று தெரிந்தால் அவர்கள் யார் என்பதை வெளியிட வேண்டும்.

நீதித்துறையிலும் தற்போது அரசியல் தலையிடு இருக்கிறது, என்பது பார் கவுன்சிலர் தலைவர் பதவி நீக்கப்பட்டதிலிருந்து தெரிகிறது.தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியாகத்தான் இல்லை. போலீஸ் கைகள் கட்டப்பட்டுள்ளது. ஆளும் கட்சியினர் சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். திரைப்படத்துறையிலும் சில தனிப்பட்ட நபர்கள் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். நடிகர் விஜய் நடித்த படத்தை தமிழக திரையரங்குகளில் திரையிட முடியாமல் இடையூறு செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார். ஞானசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் பாலூர் சம்பத், நகர தலைவர் வேதகிரி ஆகியோர் உடனிருந்தனர்.(dinamalar) 

No comments:

Post a Comment