Sunday, February 20, 2011

அரசியல் கட்சிகளின் விண்ணை முட்டும் வருமானம்


காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஆண்டு வருமானம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக கோடிகளை தொட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு, அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வாரி வழங்கியிருப்பதும் தெரிந்துள்ளது.
"அசோசியேஷன் ஆப் டெமாகிரடிக் ரிபார்ம்ஸ்' என்ற அமைப்பு,
அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கு விவரங்களை, வருமான வரித் துறையிடமிருந்து, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளது.

2007 - 08 மற்றும் 2008 - 09ம் ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்குகளை இந்த அமைப்பு பெற்றுள்ளது.இந்த இரண்டு ஆண்டுகளையும் சேர்த்து, காங்கிரஸ் கட்சி 717 கோடியே 69 லட்ச ரூபாய், பா.ஜ., 343 கோடியே 8 லட்சம், பி.எஸ்.பி., 251 கோடியே 76 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளன. மார்க்சிஸ்ட் கட்சி 122 கோடியே 53 லட்ச ரூபாய், சமாஜ்வாடி கட்சி 71 கோடியே 30 லட்சம், தேசியவாத காங்கிரஸ் 57 கோடியே 40 லட்சம், ராஷ்டிரிய ஜனதா தளம் 6 கோடியே 20 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளன.

தேசிய கட்சிகளில் மிகவும் குறைவாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு ஆண்டுகளிலும் சேர்த்து இரண்டு கோடியே 40 லட்ச ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டியுள்ளது. 2007 - 08ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2008 - 09ம் ஆண்டில் பி.எஸ்.பி.,யின் வருமானம் 161 சதவீதமும், தேசியவாத காங்கிரஸ் வருமானம் 130 சதவீதமும், காங்கிரஸ் வருமானம் 125 சதவீதமும் உயர்ந்துள்ளது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வருமானம் மட்டும், 2007 - 08ம் ஆண்டை விட 2008 - 09ம் ஆண்டில் 6.45 சதவீதம் குறைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி கூப்பன்களை விற்பனை செய்ததன் மூலம் மட்டும், 598 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. அரசியல் கட்சிகளின் ஆண்டு வருமானம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக கோடிகளை தொட்டிருப்பது பொதுமக்களை ஆச்சரியப்பட வைக்கிறது.

இந்த இரு ஆண்டுகளில் பா.ஜ., 297 கோடியே 70 லட்ச ரூபாயும், பி.எஸ்.பி., 202 கோடியே 94 லட்ச ரூபாயும், காங்கிரஸ் 72 கோடியே 9 லட்ச ரூபாயும் நன்கொடையாக பெற்றுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி, ஒருவரிடமிருந்தும் 20 ஆயிரத்திற்கும் அதிகமாக நன்கொடை பெறாத நிலையிலும், அக்கட்சி பெற்ற மொத்த நன்கொடையின் மதிப்பு 202 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, அதிக சொத்துக்கள் உடைய கட்சி காங்கிரஸ். இக்கட்சிக்கு, 611 கோடியே 77 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இதையடுத்து, பி.எஸ்.பி., கட்சிக்கு 286 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்பிலும், பா.ஜ.,வுக்கு 260 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பிலும் சொத்துக்கள் உள்ளன.

அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள், நன்கொடையாக கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாரி வழங்கியுள்ளன. பாரத் எலெக்டோரல் டிரஸ்ட் அதிகபட்சமாக 18 கோடி ரூபாயை கட்சிகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளது. இந்நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு 11 கோடி ரூபாயும், பி.ஜே.பி.,க்கு 6 கோடி ரூபாயும், ஆர்.ஜே.டி.,க்கு 1 கோடி ரூபாயும் வழங்கியுள்ளது.இதற்கு அடுத்தபடியாக, டாரன்ட் பவர் லிமிடெட் நிறுவனம் காங்கிரஸ், பி.ஜே.பி.,க்கு தலா 4 கோடியே 50 லட்ச ரூபாயும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 1 கோடி ரூபாயும் அளித்துள்ளது.

ஜெனரல் எலெக்டோரல் டிரஸ்ட் 7 கோடியே 76 லட்ச ரூபாயும், வீடியோகான் இன்டஸ்டிரியல் லிமிடெட் நிறுவனம் 7 கோடியே 50 லட்ச ரூபாயும், அதானி அண்டு முந்த்ரா போர்ட் அண்டு எஸ்.இ.இசட்., லிமிடெட் நிறுவனம் 6 கோடி ரூபாயும் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளன. தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வாரி வழங்குவது, நாட்டின் ஜனநாயகம் வளர வேண்டும் என்ற அடிப்படையில், ஏற்கனவே தேர்தல் கமிஷன் அளித்த விதிமுறைகளில் வழங்குகின்றன. ஆனால், அதன் சார்புடைய பிரதிநிதிகள் லோக்சபாவிலோ ராஜ்யசபாவிலோ வரும் வகையில் அவை அமைந்தால் பிறகு அரசியல் கட்சிகள் சோஷலிச நெறிமுறைகளை சட்டத்தில் கொண்டு வருவது இயலாததாகிவிடும்.(dinamalar)

No comments:

Post a Comment