Thursday, November 11, 2010

தினமணி தலையங்கம் உங்கள் பார்வைக்கு....



ஊழல் புகார்கள் இன்னும் நிரூபிக்கப்படாத போதிலும்கூட, "ஆதர்ஷ் வீடுகள் புகழ்' மகாராஷ்டிர மாநில முதல்வராக இருந்த அசோக் சவாண் மற்றும் "காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி புகழ்' சுரேஷ் கல்மாதி ஆகியோரைப் பதவி நீக்கம் செய்திருக்கிறது  காங்கிரஸ் கட்சி. ஆனால், ஒரு தவறு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும்கூட, திமுக தலைமை அது குறித்து எந்தவிதமான நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருக்கிறது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன எதிர்க்கட்சிகள். இந்த ஊழல் ஒருபக்கம் இருக்கட்டும். இந்தியக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு காரணமாக இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 1,76,379 கோடி என்று அறுதியிட்டுக் கூறிய பின்னரும் பதவி விலகாமல் இருப்பது என்ன நியாயம்? சரி, ஊழலே நடக்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம். இந்த இழப்பு தன் தலைமையின் கீழ் உள்ள துறையில் நடந்திருப்பதால் அந்தத் தவறுக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகுவதுதானே நியாயம்?
ரயில்வே துறையில் பெரும் விபத்து நடைபெற்றால் அதற்கு அமைச்சர் எந்த வகையிலும் பொறுப்பல்ல என்றாலும்கூட, தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சொல்வதும், லால் பகதூர் சாஸ்திரி போன்றவர்கள் தாமாகவே முன்வந்து  பதவி விலகுவதும் அரசியல் நாகரிகமாக இருந்து வந்திருக்கிறது. அப்படியெல்லாம் தார்மிகப் பொறுப்பு ஏற்காமலும், அரசியல் நாகரிகம் பற்றிக் கவலைப்படாமலும் பதவியில் ஒட்டிக்  கொண்டிருப்பது எந்த வகையிலான தமிழர் பண்பாடு என்பது புரியவில்லை.
காவிரிப் பிரச்னைக்காகக் குரல்கொடுத்த அன்றைய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி, நடுவர் மன்றத்தின் தீர்ப்பை கர்நாடகம் அமல்படுத்தாத நிலையில், மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பதவி விலகினார். காவிரியில் தண்ணீர் வராததற்கும் தொழிலாளர் நலத் துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனாலும், தமிழர் பிரச்னைக்காகத் தார்மிகப் பொறுப்பேற்று ராஜிநாமா கடிதம் கொடுத்தார்.
 தற்போது வரலாறு காணாத ஊழல் நடைபெற்றுள்ளது. இதை ஊழல் என்று ஏற்க மறுத்தாலும்கூட கணக்கு மற்றும் தணிக்கைத் துறை கூற்றின்படி 1,76,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கும்கூட பொறுப்பேற்கத் தயங்குவார்கள் என்றால், இதைப்போன்ற அவலம் தமிழக அரசியலில் வேறு எதுவுமே இருக்க முடியாது. ஆனால் மத்திய தொலைத்தொடர்புத் துறை, நீதிமன்றத்தில் தற்போது தெரிவித்துள்ள கருத்து, இந்த அமைச்சகத்தை மேலும் கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட மத்திய கணக்குத் தணிக்கைத் துறைக்கு அதிகாரம் இல்லை என்ற வாதத்தை  நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தொலைத்தொடர்பு அமைச்சகம். எப்படி இருக்கிறது பாருங்கள் நீதி?
1999-ம் ஆண்டிலும்கூட அலைக்கற்றைகளுக்கு நிரந்தரமான கட்டணம் நிர்ணயிப்பதிலிருந்து வருவாயில் குறிப்பிட்ட விழுக்காட்டைப் பெறும் திட்டத்துக்கு மத்திய கணக்குத் தணிக்கைத்துறை குறைகூறியது. அப்போது எடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவை, பிறகு ஆட்சிக்கு  வந்த அரசும் தொடர்ந்து செயல்படுத்தியது. ஆகவே, இது மத்திய அரசின் கொள்கை முடிவு. இதைத்தான் அமைச்சர் ஆ. ராசா செயல்படுத்தினார் என்கிறது தொலைத்தொடர்பு அமைச்சகம். அதாவது, ஏற்பட்டுள்ள இழப்புக்கு அமைச்சர் ஆ. ராசா  பொறுப்பாக மாட்டார் என்று விளக்கம் சொல்லாமல் சொல்லியிருக்கிறது. குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்த கதையாக இருக்கிறது தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் செயல்பாடு.
இந்தச் சம்பவங்களை இந்தியா முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு சுரேஷ் கல்மாதியையும், அசோக் சவாணையும் எவ்வாறு அவர்தம் ஊழலுக்காக கண்டிக்கிறதோ, அதைப் போலவே இந்தியா முழுவதும் ஒரு தமிழன் பற்றி மிகக் கேவலமாகப் பேசப்படுகிறது. இனியும்கூட அந்தப் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது அமைச்சர் ராசாவுக்கும் அழகல்ல, அவரை அப்பதவியில் நீடிக்க வைப்பது திமுக தலைமைக்கும் அழகல்ல.
நடைபெற்றிருப்பது அப்பட்டமான ஊழல் என்பதுதான் அனைவரும் கூறும் குற்றச்சாட்டு.
தற்போது பதவி விலகினால் அந்த ஊழலை ஒப்புக்கொண்டதாக அர்த்தமாகிவிடும் என்று திமுக நினைக்கலாம். ஆனால், ஊழல் நிரூபிக்கப்படாத நிலையிலும்கூட, இன்னும் விசாரணை நிலையில் இருப்பினும்கூட, காங்கிரஸ் தனது கட்சித் தலைவர்களின் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைச்சர் ஆ. ராசாவைப் பதவியிலிருந்து விலக்கிக் கொள்ள திமுக மறுக்கும் என்றால், அதைச் சகித்துக்கொண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவி சோனியா காந்தி மௌனம் சாதித்தால், அமைச்சரவையில் கூட்டுப் பொறுப்பு என்கிற பெயரில் மட்டுமல்லாமல், கூட்டாளியாகவும் பிரதமர் செயல்பட்டிருக்கிறார் என்கிற சந்தேகம் ஏற்படுமே, அதைக் காங்கிரஸ் தலைமை ஏன் யோசிக்க மறுக்கிறது?
சென்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, இன்னின்ன நபர்களுக்கு இன்னின்ன துறைகள் என்று, திமுக தலைமை பிரதமரிடம் பேரம் பேசியதும் முரண்டு பிடித்ததும், தலைநகர அரசியல் வட்டாரங்களில் திமுக என்று சொன்னாலே முகம் சுளிக்கும் நிலைமையை ஏற்படுத்தியது. இத்தனை குற்றச்சாட்டுகளுக்கும், அறிக்கைகளுக்கும் பிறகும்கூட, முறையான விசாரணையைத் தொடரவிடாமல் பதவியில் அமைச்சர் ஆ. ராசாவைத் தொடரவிட்டால் இந்திய அரசியலில் திமுகவுக்கு கொஞ்சநஞ்ச மரியாதையும் எஞ்சி இருக்காது. இனியும், தமிழ்நாட்டில், கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்றெல்லாம் கொள்கை அரசியல் பேசி மக்களை ஏமாற்ற முடியாது.
முதன்முதலில் இந்த ஊழல் குறித்த புகார் எழுந்தபோது, தமிழக முதல்வர் கருணாநிதியின் எதிர்வினை, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆ. ராசா அமைச்சராக இருக்கக் கூடாதா என்பதுதான். அதாவது, அவர் மீது வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியில் புகார் கூறுகிறார்கள் என்பதாக அர்த்தப்படுத்தினார். இப்போது வெள்ளம் தலைக்கு மேலே போய்விட்டது. இனியும் தாழ்த்தப்பட்டவர் என்கிற வாதத்தை முன்வைப்பாரானால், மக்களால் வாழ்த்தப்பட மாட்டார், வீழ்த்தப்படுவார் என்று யாராவது முதல்வரிடம் சொன்னால் நல்லது.

No comments:

Post a Comment