Sunday, November 14, 2010

தேர்தல் பாதையை தீர்மானிக்கப் போகும் தே.மு.தி.க.,


தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில்  நான்கு முனைப்போட்டியா அல்லது ஐந்து முனைப்போட்டியா என்பது தே.மு.தி.க.,வின் முடிவைப் பொறுத்தே அமைய உள்ளது. இதனால், எதிர்கால கணக்கை போட முடியாமல் அரசியல் கட்சிகள் தவித்து வருகின்றன.

தமிழக சட்டசபைக்கு 2011ம் ஆண்டு மே மாதம் முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு முன்னரே கூட வரலாம் என்று அரசியல் கட்சிகள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்குவதால், அது நடக்கும் தேதி எப்போது வேண்டுமானாலும் தெரியட்டும் என்று நினைக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும், இப்போதே தேர்தல் பணிகளை துவக்கிவிட்டன.ஒவ்வொரு மாவட்ட கட்சியினருடன் கலந்துரையாடல் நடத்தி தி.மு.க., தலைமை கட்சியினரை தேர்தலுக்கு தயார்படுத்தி வருகிறது. அ.தி.மு.க.,வோ தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் மாநாடுகளைப் போல், ஒவ்வொரு மண்டலத்திலும் பொதுக்கூட்டங்களை நடத்தி கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியோ தமிழகத்துக்கு கட்சியின் தலைவர் சோனியாவை வரவழைத்து பெரிய அலையை ஏற்படுத்தியது. இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைபயணம் மேற்கொண்டு, மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.பா.ம.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் தொண்டர்கள் சந்திப்பு மூலம் தேர்தல் களத்துக்கு தயாராகி வருகின்றன. தமிழக அரசியலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் கட்சியாக உருவெடுத்துள்ள தே.மு.தி.க.,வோ தற்போது தான், கூட்டம் நடத்தி தேர்தல் களத்தில் குதித்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சி அமைதியாக இருந்தாலும், உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாகியுள்ளது.  கம்யூனிஸ்ட்டுகளும் ஊர், ஊராக சென்று கட்சியினருடன் ஆலோசனை நடத்துவது, கூட்டங்கள் போடுவதன் மூலம் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.இப்படி பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, எட்டு தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டு இந்திய ஜனநாயகக் கட்சி தேர்தல் களத்தில் முதலாவதாக குதித்துள்ளது.பாரதிய ஜனதாக் கட்சியோ தனித்து போட்டி என்று சூசகமாக அறிவித்து விட்டது. தி.மு.க., காங்கிரஸ் ஒரு அணியாகவும், அ.தி.மு.க.,- ம.தி.மு.க.,- கம்யூ., ஒரு அணியாகவும், தே.மு.தி.க., தனி அணியாகவும் போட்டியிட்டால், தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஐந்து முனைப் போட்டியாக நடக்கும். அதேசமயம் தே.மு.தி.க., ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டால் நான்கு முனைப்போட்டியாக தேர்தல் நடக்கும்.எனவே, தமிழகத்தில் நடக்கவிருக்கும் தேர்தல் நான்கு முனைப்போட்டியா,  ஐந்து முனைப்போட்டியா என்பது தே.மு.தி.க.,வின் முடிவைப் பொறுத்தே அமையவுள்ளது. தே.மு.தி.க.,வின் முடிவை வைத்தே, தங்களது அரசியல் கணக்கை போட முடியும் என்பதால் மற்ற அரசியல் கட்சிகளும் இந்த முடிவை ஆவலோடு எதிர்பார்க்கின்றன.(dinamalar)

No comments:

Post a Comment