Monday, December 6, 2010

தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல் : முதல்வர் எச்சரிக்கை



 ""கோஷ்டிப் பூசல் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு, சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.,விற்கு வெற்றியை பெற்றுத்தர வேண்டும்,'' என, புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க., நேர்காணல் கூட்டத்தில் கட்சியினரை முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.,வின் வெற்றிக்கும், கட்சியினரை உற்சாகப்படுத்துவதற்கும், அவர்களின் நிறைகுறைகளை கேட்டறியும் நேர்காணல் நிகழ்ச்சி,
மாவட்ட வாரியாக நடந்து வருகிறது.கடந்த அக்டோபர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை ராமநாதபுரம், கோவை, தென் சென்னை மாவட்டங்களின் முதல் கட்ட நேர்காணல் கூட்டம் நடந்தது.இரண்டாவது கட்டமாக கடந்த 1ம் தேதி தூத்துக்குடி மாவட்ட நேர்காணல் கூட்டம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளின் நேர்காணல் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு முதல்வர் கருணாநிதி தலைமை வகித்தார். பொதுச்செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், முதன்மைச் செயலர் ஆற்காடு வீராசாமி உட்பட, தலைவர்கள் முன்னிலை  வகித்தனர். மாவட்டச் செயலர் பெரியண்ணன் அரசு, முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி, அறந்தாங்கி எம்.எல்.ஏ., உதயம் சண்முகம், முன்னாள் எம்.பி., ராஜாபரமசிவம், மாவட்ட நிர்வாகிகள் சந்திரசேகரன், தங்கவேல் உட்பட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் மாவட்ட, நகர, ஒன்றிய அளவில் உள்ள கோஷ்டிப் பூசல் குறித்து விலாவாரியாக விளக்கினர். மாவட்ட செயலர் பெரியண்ணன் தனியாக செயல்படுவதாகவும், கட்சியினரை அரவனைத்து செல்லவில்லை, யாரையும் அவர் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளை  அடுக்கினர்.

மாவட்ட செயலர் பெரியண்ணன் அரசு பேசும்போது, ""என் மீது குற்றச்சாட்டுகளை கூறும் அளவுக்கு அப்படி நடந்து கொள்ள வில்லை. எல்லாரையும் ஒருங்கிணைத்து செயல்பட நான் தயாராக இருக்கிறேன்,'' என்றார்.

முதல்வர் கருணாநிதி பேசும்போது, ""ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளீர்கள். அனைவரும் இனிமேல் ஒற்றுமையாக செயல்படுங்கள். வரும் சட்டசபைத் தேர்தலில் அனைவரும் ஒன்றுபட்டு தேர்தலில் தி.மு.க., விற்கு வெற்றியை தேடி தரவேண்டும். ஜெயலலிதா ஆட்சியின் அதிகாரத்திற்கு வந்து விடக் கூடாது என்பதை மனதில் வைத்து வெற்றிக்காக உழைக்க வேண்டும்,'' என கட்சியினரை எச்சரித்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.(DINAMALAR) 

No comments:

Post a Comment