Friday, December 17, 2010

தி.மு.க., கூட்டணி குறித்து காங்கிரஸ் ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு, டில்லியில் இன்று துவங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், முக்கியமான அரசியல் தீர்மானங்கள் பல நிறைவேற்றப்படவுள்ளன. ஸ்பெக்ட்ரம் பிரச்னையால் ஒரு நாள் கூட பார்லிமென்டின் குளிர் காலக் கூட்டத் தொடர் நடைபெறாமல் முடிவடைந்த சூழ்நிலையில்,
இம்மாநாடு நடப்பதால், அந்த ஊழல் விவகாரம் குறித்தும், தி.மு.க., உடனான கூட்டணி குறித்தும் விவாதிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு, இன்று டில்லியின் மையப்பகுதியில் இருந்து, 15 கி.மீ., தொலைவில் உள்ள புராரி என்ற இடத்தில், நடக்கிறது. இம்மாநாட்டில் கட்சியின் முக்கிய தலைவர்கள், கட்சியின் முக்கிய பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். முதல் நாளான இன்று, காங்., செயற்குழு கூட்டம் பார்லிமென்ட் அனெக்ஸ் கட்டடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தலைவர் தேர்ந்தெடுத்த பிறகு ஏற்கனவே உள்ள செயற்குழு கலைக்கப் பட்டு, வழிகாட்டுதல் கமிட்டியாக மாற்றப்பட்டது. அது இன்று கருத்தாய்வு கூட்டம் என்ற பெயரில் நடைபெறும். இந்த கமிட்டிக்கு உறுப்பினர்கள் தேர்வான பிறகு, செயற்குழு முறையாக அமைக்கப்படும். மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ள அரசியல் தீர்மானங்கள் குறித்த ஆலோசனை இதில் நடைபெறும். தவிர அந்த தீர்மானங்களுக்கான இறுதி வடிவமும் இந்த கூட்டத்தில் தரப்படும்.

நான்காண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடைபெறும் இம்மாநாடு, பல்வேறு குழப்பமான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் நடைபெறுவதால், காங்., கட்சியினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக அடுத்தடுத்த ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்லி., பொது கணக்கு குழுவே, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்கட்டும் என முடிவு செய்ததை, எதிர்க்கட்சிகள் ஏற்காமல் பார்லி.,யையே முடக்கியது குறித்து, அரசியல் தீர்மானத்தில் குறிப்பிட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல் போன்றவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை குறித்தும், தீர்மானத்தில் குறிப்பிடப்பட வாய்ப்புள்ளது. பா.ஜ.,வும், இடதுசாரிகளும் ஓரணியாக மாறிவிடாத வகையில் யுத்திகள் வகுக்கப்படலாம். தவிர கூட்டணி ஆட்சி குறித்து, இம்மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு மே மாதம் தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா ஆகிய மாநிலங்களில், சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதில், தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் தி.மு.க., மற்றும் திரிணமுல் காங்., ஆகிய கட்சிகளுடன், காங்.,கூட்டணியில் உள்ளது. இம்மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், அவற்றுடனான கூட்டணி குறித்தும், குறிப்பாக தமிழகத்தில் தி.மு.க., உடனான கூட்டணி குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.(dinamalar)

No comments:

Post a Comment