Thursday, December 16, 2010

பிரதமர் வீட்டிற்கு நடந்து சென்ற சோனியா

இந்தியா வந்துள்ள சீனப் பிரதமர் வென் ஜியாபோவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால், காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் வீட்டிற்கு நடந்து சென்றார்.

சீனப் பிரதமர் வென் ஜியாபோ மூன்று நாள் அரசு முறை பயணமாக, நேற்று முன்தினம் இந்தியா வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திபெத்தியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனப் பிரதமருக்கு, பிரதமர் மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில் தனது வீட்டில் நேற்று முன்தினம் இரவு விருந்து அளித்தார். இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா, சபாநாயகர் மீரா குமார், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உள்ளிட்ட சிலர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

வென் ஜியாபோவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருந்ததால், பிரதமர் வீடு அமைந்துள்ள பகுதியில், வாகனங்கள் செல்ல முடியாதபடி, சாலைகள் அனைத்தும் மூடி சீல் வைக்கப்பட்டன. இதனால், சோனியா காரிலிருந்து இறங்கி, பிரதமர் வீட்டிற்கு அரை கி.மீ., தொலைவு நடந்து சென்றார்.

No comments:

Post a Comment