Thursday, December 30, 2010

யாருடன் கூட்டணி? சில நாள்களில் இறுதி முடிவு: ஜெயலலிதா




சென்னை, டிச. 30: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றிய இறுதி முடிவு இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்படும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் சென்னை அருகே வானகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமை வகித்தார்.  பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் ஜெயலலிதா பேசியதாவது: 1967-ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அண்ணா மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதாவது, 1967-க்குப் பிறகு திராவிட கட்சிகளில் ஒன்றுதான் தமிழகத்தை ஆளும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையை அண்ணா ஏற்படுத்தினார்.அதேபோல் 2011 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க. மட்டுமே தமிழகத்தில் நிரந்தரமாக ஆட்சி அமைக்கும் என்ற புதிய திருப்புமுனையை நம்மால் ஏற்படுத்த முடியும்.நீங்கள் என்னுடன் சேர்ந்து ஒத்துழைத்தால், கட்சிக்காக விசுவாசமாக உழைத்தால், கட்சிக்கான கடமையை சரிவரச் செய்தால் இந்த திருப்புமுனையை நாம் ஏற்படுத்தி விட முடியும்.ஒற்றுமை தேவை: எம்.ஜி.ஆர். காலத்திலும் சிலருக்குதான் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். எனினும், எம்.ஜி.ஆர். முதல்வராக வர வேண்டும், அ.தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்பதையே அவர்கள் பிரதானமாக நினைத்ததால், ஏமாற்றத்தை மறந்து கட்சி நலனுக்காக மட்டுமே உழைத்தனர்.ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளராக வாய்ப்புள்ளவர்கள் 10 முதல் 15 பேர் வரை உள்ளனர். எனினும், அவர்களில் ஒருவருக்குதான் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு தர முடியும். இந்த எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், வாய்ப்பு கிடைக்காத நான்கைந்து பேர் சேர்ந்து கொண்டு, நம் கட்சி வேட்பாளரையே தோற்கடிக்கும் புதிய கலாசாரம் கட்சியில் உருவாகியுள்ளது.2006 தேர்தலில் உண்மையில் நாம் ஆட்சி அமைத்திருக்க முடியும். நம்மை தி.மு.க. தோற்கடிக்கவில்லை. ஆனால், நம் கட்சியினரே பல தொகுதிகளில் நம் வேட்பாளர்களைத் தோற்கடித்து விட்டனர்.இதனால், கடந்த நான்கரை ஆண்டுகளாக நாம் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம். 2011 தேர்தலிலும் இதே நிலைமை ஏற்படக் கூடாது. எனவே, யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும், அவர் அ.தி.மு.க. வேட்பாளர். அவரை வெற்றி பெறச் செய்து, அ.தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில், நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.மனம்விட்டு பேசும் சூழ்நிலை இல்லை: பொதுக்குழுவில் பல விஷயங்களை மனம் விட்டு பேச வேண்டும் என்பதுதான் உங்களில் பலரது விருப்பம். எனது விருப்பமும் அதுதான். அத்தகைய கருத்துப் பரிமாற்றம் கட்சி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியும். எனினும், அதற்கான சூழ்நிலை இப்போது இல்லை. எம்.ஜி.ஆர். காலத்தில் சத்யா ஸ்டுடியோவில் பொதுக்குழு நடைபெறும். கூட்டம் நடைபெறும் இடம் அருகே பத்திரிகையாளர்கள் செல்ல முடியாது. அதனால், கட்சியினர் தங்கள் மனக் குமுறல்களை மனம் விட்டுப் பேசுவார்கள். அது எதுவுமே வெளியில் தெரியாது.ஆனால், இன்று கூட்டம் நடைபெறும் அரங்கைச் சுற்றிலும் பத்திரிகையாளர்கள் நின்று கொண்டு, நாம் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு நாம் பேசுவது கேட்காவிட்டால் கூட, நம் கட்சியினரே வெளியில் சென்று என்னென்ன பேசினோம் என சொல்லி விடுகிறார்கள்.ஒரு குடும்பத்துக்குள் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கும். அதைப்பற்றி யாரும் வெளியில் சென்று பேசுவதில்லை. அதபோல் கட்சி என்பதும் ஒரு மிகப் பெரிய குடும்பம். இங்கு எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், நமக்குள் பேசிக் கொள்ள வேண்டுமே தவிர, வெளியில் பேசக் கூடாது. 2011-ம் ஆண்டு நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியினர் நிச்சயம் மனம் விட்டுப் பேசலாம். அப்போது அ.தி.மு.க. ஆட்சி அமைந்து விடும். அப்போது பத்திரிகையாளர்களை நம் கூட்ட அரங்குக்கு வராமல் செய்து, பிரச்னைகளை மனம் விட்டுப் பேச வாய்ப்பு தரப்படும்.கூட்டணி குறித்து...: கூட்டணியைப் பற்றி நான் சொல்லியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உங்களிடம் இருப்பது எனக்குத் தெரியும். எத்தகைய கூட்டணியை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதும் எனக்கு நன்கு தெரியும். அந்தக் கூட்டணியில் எந்தெந்தக் கட்சியெல்லாம் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவதும் எனக்குத் தெரியும்.நிச்சயமாக நீங்கள் விரும்பக் கூடிய கூட்டணியை நான் அமைப்பேன். அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.நாம் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை இந்தப் பொதுக்குழுக் கூட்டத்திலேயே அறிவிக்க வேண்டும் என்று நான் ஆவலுடன் இருந்தேன். எனினும், 2010-ம் ஆண்டு நிறைவடைய இன்னும் ஓரிரு நாள்கள் மட்டுமே உள்ளன. நம் கட்சியின் சட்ட திட்ட விதிகள்படி 2010 இறுதிக்குள் நாம் பொதுக்குழுவை நடத்தியாக வேண்டும். எனவே, இந்தக் கூட்டத்தில் கூட்டணி பற்றி அறிவிக்க எனக்கு கால அவகாசம் இல்லை. இருந்தபோதிலும், கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகளை நான் ஏற்கெனவே தொடங்கி விட்டேன். சில முக்கியமான கட்சிகளுடன் இப்போது நான் பேசி வருகிறேன். இன்னும் ஒப்பந்தம் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தைகள் முடிந்து, யாருடன் கூட்டணி என்பதை இன்னும் சில நாள்களில் அறிவிப்பேன் என்றார் ஜெயலலிதா.(dinamani)

No comments:

Post a Comment