Thursday, December 30, 2010

போதையில் தவறு செய்த அம்பயர்: தென் ஆப்ரிக்கா அதிரடி புகார்

டர்பன் டெஸ்ட் போட்டியின் போது, அம்பயர் ஸ்டீவ் டேவிஸ், மது அருந்தியிருந்ததாக தென் ஆப்ரிக்க வீரர்கள் புகார் கூறியுள்ளனர். போதையில் தள்ளாடிய இவர் முக்கியமான கட்டத்தில், தங்களுக்கு எதிராக தவறான தீர்ப்பு அளித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.
டர்பனில் இந்தியா, தென் ஆப்ரிக்கா மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்தது. இதில், அபாரமாக ஆடிய இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் அம்பயராக செயல்பட்ட ஸ்டீவ் டேவிஸ்(ஆஸ்திரேலியா) மற்றும் அசாத் ராப்(பாகிஸ்தான்) சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை அளித்தனர். இரண்டாவது இன்னிங்சில் ஹர்பஜன் பந்தில் டிவிலியர்சுக்கு சர்ச்சைக்குரிய முறையில் எல்.பி.டபிள்யு., கொடுக்கப்பட்டது. இதே போல ஜாகிர் கான் பந்தில் பவுச்சருக்கும் தவறாக எல்.பி.டபிள்யு., கொடுத்தார் ஸ்டீவ் டேவிஸ். இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில், ஸ்டைன் பந்தில் ஜாகிர் கானுக்கு எல்.பி.டபிள்யு., கொடுக்க மறுத்தார் ஸ்டீவ். இது போன்ற முடிவுகளால் தென் ஆப்ரிக்க அணியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இத்தொடரில் அம்பயர் மறுபரிசீலனை முறை இல்லாததால் பிரச்னை பெரிதாகியுள்ளது. டர்பன் டெஸ்ட் போட்டியின் போது ஸ்டீவ் டேவிஸ், குடித்திருந்ததாக தென் ஆப்ரிக்க அணியை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத வீரர்கள் சிலர் புகார் கூறியுள்ளனர். இதன் காரணமாகவே தவறான திர்ப்பு அளித்துள்ளார். இவர் மீது ஐ.சி.சி.,யிடம் புகார் கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக தென் ஆப்ரிக்காவில் இருந்தும் வெளியாகும் "பீல்டு' பத்திரிகையில் வெளியான செய்தி:
டர்பன் டெஸ்ட் முடிந்ததும் தென் ஆப்ரிக்க அணியினர், அம்பயர் ஸ்டீவ் டேவிஸ் பற்றி தான் அதிகமாக புலம்பினர். இரு அணி வீரர்கள் தங்கியுள்ள உம்ஹலங்கா ஓட்டலில் அவர் போதையில் தள்ளாடியதை பார்த்துள்ளனர். செஞ்சுரியன் டெஸ்ட் போட்டியின் போதும், காலை நேரத்தில் சாண்டன் ஓட்டலில் தள்ளாடியவாறு அவர் நுழைந்துள்ளார்,'''என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தென் ஆப்ரிக்க அணியின் மானேஜர் முகமது மூசாஜி, ஐ.சி.சி., ரெப்ரி குழுவின் தலைவர் வின்சென்ட் வான் டர் பிஜிக்கு அனுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,""டேவிஸ் பற்றிய அதிர்ச்சி புகாரை அறிந்தேன். இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து எதுவும் தெரிவிக்க இயலாது. அதிகாரப்பூர்வமாக புகார் அளித்த பின் தான் நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.

No comments:

Post a Comment