Sunday, December 19, 2010

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: மொரீஷியஸ் போன்ற நாடுகளில் நடந்தது என்ன?

பல கோடி ரூபாய் ஊழல் நடந்த, "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம், இரண்டாம் கட்டமாக அமலாக்கத் துறையினர் சில விசாரணைகளைத் துவக்கியுள்ளனர். இதில், மொரீஷியஸ் போன்ற நாடுகளில் நடந்த பணப்பரிமாற்றங்களை
துருவி ஆராயத் துவங்கியுள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசாரித்து வரும் சி.பி.ஐ.,யுடன் இணைந்து, அமலாக்கத் துறையும் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் டில்லி, நொய்டா மற்றும் தமிழகத்தில் இது தொடர்பாக நடந்த ரெய்டுகள், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை இரண்டும் இணைந்து நடத்தியவை என்பது குறிப்பிடத்தக்கது.திடீர் ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து இருதரப்பும் தகவல் பரிமாற்றம் செய்து வருகின்றன. அவ்வப்போது இணைந்து அவசரக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இவ்விவகாரத்தில் தொடர்புடைய தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் அமலாக்கத் துறை முதற்கட்ட விசாரணைகளை நடத்தியது. அப்போது, அந்நிறுவனங்கள் சில ஆவணங்களைத் தாக்கல் செய்திருந்தன.அந்த ஆவணங்கள், அந்நிறுவனங்களின் வருமான வரி ரிட்டர்ன், பங்கு முதலீட்டு விவரங்கள், மானியங்கள், பணம் வந்த விதம் தொடர்பானவை.இப்போது அமலாக்கத் துறை அந்நிறுவனங்களிடம் துவக்கியுள்ள இரண்டாம் கட்ட விசாரணையில், சட்ட விரோதமாக மொரீஷியஸ் போன்ற நாடுகளில் அந்நிறுவனங்கள் போட்டு வைத்துள்ள பணம் பற்றியும்,  மானியங்கள் மற்றும் அந்நிறுவனங்களுக்கு எந்தெந்த வழிகளில் எல்லாம் பணம் கிடைத்தது என்பது பற்றியும் கேள்விகள் கேட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த ஊழலில் தொடர்புடைய ஹவாலா தரகர்கள் பற்றியும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.சில குறிப்பிட்ட நிறுவனங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்காக, 10 வெளிநாடுகளின் உதவியை அமலாக்கத் துறை ஏற்கனவே கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சகம் ஆலோசனை:இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக, பல வெளிநாடுகளுக்கு  பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அவற்றில் மொரீஷியஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், மேன் தீவு, சைப்ரஸ், கேமேன் தீவு மற்றும் பெர்முடா ஆகிய நாடுகள் இதுபோன்ற பணவரவுகளை வரவேற்கும் குறிப்பிட்ட நாடுகள். இவை கறுப்புப் பணத்தை முதலீடு செய்ய ஏற்ற களங்களாகும்.இந்தியாவில் சட்ட விரோதமாகப் பெறப்பட்ட பணம், மொரீஷியசில், பல்வேறு துறைகளில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இரட்டை வரிவிதிப்பு சலுகையை பயன்படுத்தி செய்யப்படும் சில முதலீடுகளால் இந்தியாவுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு வரி நஷ்டம் ஏற்படுகிறது.ஐ.பி.எல்., ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் விவகாரங்களில் விசாரணை நடத்தி வரும் அரசு அமைப்புகள், சட்ட விரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்ட பணம் குறித்து மொரீஷியஸ் நாட்டிடம் சில விளக்கங்களை கேட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 1983ம் ஆண்டு மொரீஷியசுடன் இந்தியா செய்து கொண்ட "இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்த'த்தில் மாற்றம் செய்வது குறித்து நிதியமைச்சகம் தற்போது ஆலோசித்து வருகிறது.இந்த ஒப்பந்தத்தில், இரு நாடுகளில் இருந்தும் பரஸ்பரம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் அனைத்துச் சொத்துக்கள், முதலீடுகள் பற்றிய விவரங்கள், முதலீட்டாளர்கள் பற்றிய தனிப்பட்ட விவரங்களைக் கோரும் பிரிவு சேர்க்கப்படும் என அமலாக்கத் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம்:இந்தியா, 79 நாடுகளுடன் இந்த இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.வரி விதிப்புக் கடுமையாக உள்ள ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டில் சில குறிப்பிட்ட துறைகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு குறிப்பிட்ட அளவு மட்டும் வரி விதிப்பதை இந்த ஒப்பந்தம் வரையறுக்கிறது.இந்தியப் பங்குச் சந்தையில் கணிசமான அளவு வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் வெளிநாட்டவர், மொரீஷியஸ் நாடு மூலமாகவும் செயல்படுகின்றனர் என கண்டறியப்பட்டிருக்கிறது.கடந்த 1983ல், இந்தியா, மொரீஷியசுடன் மேற்கொண்ட இந்த ஒப்பந்தப்படி, இந்திய முதலீட்டாளர் ஒருவர் தன் பங்குகளை விற்பதன் மூலம் திரட்டிய நிதியை மொரீஷியசில் முதலீடு செய்யலாம். அந்தப் பங்குகளுக்கான வரியை இந்தியாவில் செலுத்த வேண்டியதில்லை. இதனால் இந்தியாவுக்கு, "முதலீட்டு மீதான வரி' இழப்பு ஏற்படுகிறது. (dinamalar)

No comments:

Post a Comment