Thursday, November 11, 2010

ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம்

ஸ்பெக்ட்ரம் 2 ஜி ஒதுக்கீட்டால் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என, மத்திய அரசின் தணிக்கை துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த தொகை இருந்தால், தமிழக அரசு மூன்று ஆண்டுகளுக்கு பட்ஜெட் போட்டிருக்க முடியும்; எத்தனையோ திட்டங்களை செயல்படுத்தியிருக்க முடியும். இவ்வளவு பெரிய தொகை இருந்தால், ஒரு மாநிலத்தையே தலைகீழாக மாற்றிவிட முடியும். இந்த ஒதுக்கீட்டால் அரசுக்கு ஆண்டுதோறும் வருமானம் கிடைக்கும் என்றும், முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்றும், ஐந்து தனியார் மட்டுமே இத்துறையில் இருந்ததை மாற்றி மேலும் சில தனியாரை கொண்டு வந்ததாகவும், அமைச்சர் ராஜா தரப்பில் தொடர்ந்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், இவ்வளவு பெரிய தொகை இருந்திருந்தால், தமிழக அரசு மூன்று ஆண்டுகளுக்கு பட்ஜெட் போட்டு விட முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில், வரவுகள் 63 ஆயிரத்து 91 கோடியே 74 லட்சம் ரூபாய் எனவும், செலவுகள் 66 ஆயிரத்து 488 கோடியே 19 லட்சம் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 3,396 கோடியே 45 லட்சம் ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஆகிறது. இதுதவிர, கடன்கள், முன்பணம், மூலதனச் செலவுகளை கணக்கிட்டால், 16 ஆயிரத்து 222 கோடியே 13 லட்சம் ரூபாய் நிதிப் பற்றாக்குறை காட்டப்பட்டுள்ளது. எனவே, 1.76 லட்சம் கோடி ரூபாய் இருந்தால், 10 ஆண்டுகளுக்கு பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் போட முடியும். தமிழக அரசு எந்த வருவாயும் பெறாமல், மூன்று ஆண்டுகளுக்கு பட்ஜெட் போட்டு விட முடியும். உணவு மானியத்துக்காக மட்டும் தமிழக அரசு 4,000 கோடி ரூபாய் ஒதுக்குகிறது. 1.76 லட்சம் கோடி இருந்தால், பெட்ரோல் முதல் அனைத்து பொருட்களையுமே மிக மிக மலிவான விலையில் வழங்க முடியும். அதுமட்டுமன்றி, நதிநீர் இணைப்பு, புல்லட் ரயில், இருவழி ரயில் பாதை, தனி சரக்கு காரிடர், சாலை வசதிகள் என அனைத்து மிகப் பெரிய திட்டங்களையும் இத்தொகையில் செயல்படுத்தி, தமிழகத்தையே சிங்கப்பூராக மாற்றிவிட முடியும்.

தமிழகத்தில் நான்கு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் தொகையை பிரித்துக் கொடுத்தால், ஒரு ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய் தர முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஐந்து ஓட்டுகள் உள்ள குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் தர முடியும். பொருளாதார வல்லுனர்கள் இந்த தகவல்களை தெரிவித்துள்ளனர். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாக அமையும் என்பதில் வியப்பில்லை.(dinamalar)

No comments:

Post a Comment