Thursday, November 11, 2010

முடிந்தது, "என்கவுன்டர்': அடுத்தது என்ன? புதிய தகவல்கள்


கோவையில், பள்ளிக் குழந்தைகளை கடத்தி கொலை செய்த குற்றவாளிகள் இருவரில் மோகனகிருஷ்ணன் என்பவன், "என்கவுன்டரில்' போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்நடவடிக்கையை தொடர்ந்து வழக்கு விசாரணையின் அடுத்த கட்டமாக, எஞ்சிய குற்றவாளி மனோகரன் மீதான குற்றப்பத்திரிகையை இன்னும் 20 நாளில் கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கான பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கோவை நகரிலுள்ள காத்தான்செட்டி வீதியில் வசிக்கும் ரஞ்சித்குமாரின் மகள் முஸ்கன் (11), மகன் ரித்திக் (8) ஆகியோரை, கடந்த மாதம் 29ம் தேதி கால் டாக்சியில் கடத்தி கொலை செய்த பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன், கூட்டாளி மனோகரன் கைது செய்யப்பட்டனர்.இவர்களை கஸ்டடியில் எடுத்த தனிப்படை போலீசார், "கொலை செய்தது எப்படி' என விசாரிக்க, 9ம் தேதி அதிகாலை செட்டிபாளையம் ரோட்டில் வேன்களில் அழைத்து சென்றனர். அப்போது, பாதுகாப்பு போலீசிடம் துப்பாக்கியை பறித்து எஸ்.ஐ.,க்கள் இருவரை சுட்ட மோகனகிருஷ்ணனை போலீசார் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக, மாஜிஸ்திரேட் தெய்வம் விசாரணை நடத்தி வருகிறார். வழக்கில் மற்றொரு குற்றவாளியான மனோகரனின் தொடர்பு குறித்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.

அடுத்தது என்ன? குழந்தைகள் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மோகனகிருஷ்ணன், மனோகரன் ஆகியோர் மீதான குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணிகளை, பிரத்யேக விசாரணைக் குழுவின் மேற்பார்வை அதிகாரியான உதவிக் கமிஷனர் குமாரசாமி தலைமையிலான போலீசார் துவக்கியுள்ளனர்.கொலையில் மோகனகிருஷ்ணன் மற்றும் மனோகரனின் பங்கு என்ன, கொலையை நிகழ்த்த திட்டமிட்டது எப்படி, கொலைத் திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றினர் என்பது பற்றிய ஆதாரப்பூர்வ தகவல்களை போலீசார் திரட்டியுள்ளனர்.அடுத்ததாக, கொலை குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான நேரில் கண்ட சாட்சியங்கள், ஆவண ஆதாரங்கள், தடய அறிவியல் துறையினரின் சாட்சியங்கள், மருத்துவத் துறையின் ஆவணங்கள், கொலைக்கு பின் கைப்பற்றப்பட்ட தடயங்கள் உள்ளிட்ட பிற ஆதாரங்களை சேகரிக்கும் பணி நடக்கிறது. தமிழகத்தை உலுக்கிய இக்கொடூர கொலை வழக்கில் இன்னும் 20 நாட்களில் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கான பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. இதற்கென 10 போலீஸ் அதிகாரிகள் பம்பரம் போல சுழன்று பணியாற்றுகின்றனர். இவ்வழக்கின் ஒவ்வொரு கட்ட நகர்வையும் மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கேட்டறிந்து, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

முக்கிய சாட்சிகள் யார்: இவ்வழக்கில் சேர்க்கப்பட வேண்டிய நேரடி சாட்சிகளின் பட்டியலை தயாரித்துள்ள போலீசார், ஒவ்வொருவரையும் தனித்தனியே விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். கடத்தி கொல்லப்பட்ட இரு குழந்தைகளின் பாட்டி கமலாபாய், கோவை மத்திய சிறையில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடந்த அடையாள அணிவகுப்பின் போது, கொலையாளிகள் மோகனகிருஷ்ணன், மனோகரன் இருவரையும் அடையாளம் காட்டியுள்ளார். இவர், இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படுகிறார். அடுத்ததாக, கொலை குற்றவாளிகளுக்கு தனது கால் டாக்சியை கொடுத்த மேட்டூரைச் சேர்ந்த அன்பு, அங்கலக்குறிச்சியில் மோகன கிருஷ்ணனுக்கு சொந்தமான வீட்டில் குடியிருக்கும் நபர், கொலையாளிகளில் ஒருவரான மனோகரனின் தாயார் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.மேலும், குழந்தைகளை மலையில் இருந்து தள்ளி கொலை செய்யும் திட்டத்துடன் அங்கலக்குறிச்சியில் நடமாடிய இரு குற்றவாளிகளையும் பார்த்த நபர்கள், உடுமலை தீபாலபட்டியிலுள்ள பி.ஏ.பி., வாய்கால் பகுதியில் குற்றவாளிகளை பார்த்தவர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ ஆவணங்கள்: கொலையாளிகள் மோகனகிருஷ்ணன், மனோகரன் இருவருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் சமீபத்தில் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. சிறுமி முஸ்கன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளதால், மருத்துவ அறிக்கை முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. மேலும், இரு குழந்தைகளின் பிரேத பரிசோதனை அறிக்கையும் சேர்க்கப்படவுள்ளது. கோர்ட்டில் வழக்கு விசாரணை நடக்கும் போது மருத்துவ சான்று அளித்த அரசு டாக்டர்களும் ஆஜராகி சாட்சியம் அளிக்கவுள்ளனர். கோவை மாநகர போலீசாரை பொறுத்தவரை, இவ்வழக்கை தங்களது புலன் விசாரணைத் திறனுக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே கருதுகின்றனர். குற்றவாளிகளில் ஒருவர் "என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், எஞ்சிய குற்றவாளி மனோகரனுக்கு கோர்ட்டில் அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவதற்கான தீவிர முனைப்பில் போலீசார் உள்ளனர். அதற்கேற்ப சாட்சியங்கள், ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.

மேலும் இருவர் தொடர்பு? பள்ளி குழந்தைகள் கொலை வழக்கில் மோகனகிருஷ்ணன் மட்டும் கடந்த மாதம் 29ம் தேதி (சம்பவம் நடந்த அன்று) கைது செய்யப்பட்டார். "இவர், தனி நபராக செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை' எனக்கருதிய போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர். மனோகரனுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு மறுநாளே கைது செய்யப்பட்டான்.இந்நிலையில், இவ்விரு குற்றவாளிகள் தவிர மேலும் இருவருக்கு கொலையில் தொடர்பு இருப்பதாக போலீஸ் மத்தியில் தகவல்கள் கிளம்பின. ஆனால் இதை, போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு அடியோடு மறுத்துள்ளார்.சைலேந்திரபாபு கூறுகையில், "குழந்தைகளை கடத்தி கொன்ற வழக்கில் இருவருக்கு மட்டுமே தொடர்பு உள்ளது; விசாரணையின் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளோம்' என்றார்.

"என்கவுன்டர்' 6 பிரிவுகளில் வழக்கு: கொலையாளி மோகனகிருஷ்ணன் போலீஸ் "என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, போத்தனூர் போலீசில் ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 228 (போலீஸ் காவலில் இருந்து தப்ப முயற்சித்தல்), 332 (அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துதல்), 353 (அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 506 (2) (கொலை மிரட்டல்), 307 (கொலை முயற்சி), இந்திய ஆயுத தடைச்சட்டம் பிரிவு 25 (1)(பி) ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, நீதித்துறை விசாரணை நடந்து வருகிறது.

2வது நாளாக மாஜிஸ்திரேட் விசாரணை: மோகனகிருஷ்ணன் என்கவுன்டர் குறித்து இரண்டாவது நாளாக மாஜிஸ்திரேட் விசாரணை நேற்று நடந்தது. ஜே.எம்.எண்: 7 மாஜிஸ்திரேட் தெய்வம், கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணையை துவக்கினார்.முதல் நாள் விசாரணையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த டிரைவர்கள், பொதுமக்கள் மற்றும் சுட்டுக்கொல்லப்பட்ட டிரைவரின் தந்தை ராதாகிருஷ்ணன், மைத்துனர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர். இரண்டாவது நாளான நேற்று பகல் 1 மணிக்கு அரசு மருத்துவமனைக்கு வந்த மாஜிஸ்திரேட் முன்னிலையில், டிரைவரின் பிரேதம் வீடியோ எடுக்கப்பட்டது. பின்னர் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.மேலும், போலீஸ் அதிகாரிகள், டிரைவரின் உறவினர்கள், மருத்துவ அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து என்கவுன்டர் நடந்த போத்தனூர் - செட்டிபாளையம் ரோட்டில் உள்ள குப்பைக் கிடங்கு மற்றும் கோவை மாநகர போலீஸ் பயிற்சி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, போலீசார் சென்ற வேன் ஆகியவற்றை ஆய்வு செய்து, அதிகாரிகள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.

போலீசாருக்கு வெகுமதி : காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முடிவு: கோவை பள்ளி மாணவர்களை கடத்திக் கொலை செய்த மோகனகிருஷ்ணனை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற போலீசாருக்கு வெகுமதி வழங்க, பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில், இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடந்தது. தலைவர் கணேஷ் தலைமை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், குழந்தைகளின் படத்துக்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.கொலையாளி மோகன்ராஜை என்கவுன்டரில் கொன்ற போலீசாருக்கு பரிசாக, அனைத்து வியாபாரிகளின் சார்பில் 25 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, பொள்ளாச்சி டி.எஸ்.பி., முத்தழகிடம் வழங்கினர். ஆனால், "இரண்டு நாட்களுக்கு பின் வாங்கி கொள்கிறேன்' என, டி.எஸ்.பி., தெரிவித்ததால், திரும்பி வந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கோவை நகரெங்கும் போஸ்டர்கள்: கோவை நகரில் பள்ளிக் குழந்தைகளை, கால் டாக்சியில் கடத்தி கொன்ற கொலையாளிகள் இருவரில் மோகனகிருஷ்ணன், "என்கவுன்டரில்' நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டான்.இந்நடவடிக்கையில் ஈடுபட்ட மாநகர போலீசாரை பாராட்டி ஆட்டோ டிரைவர்கள், கால் டாக்சி டிரைவர்கள், வியாபாரிகள், பொதுநல அமைப்புகள், வக்கீல் சார்பில் நகரெங்கும் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. வாழ்த்து தெரிவிக்க வருவோரை கமிஷனர் தவிர்த்து வருகிறார்.இதுகுறித்து கமிஷனர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், "என்கவுன்டர்' நடவடிக்கையை எதேச்சையாக, துரதிருஷ்டவசமாக மேற்கொள்ள நேரிட்டது. இது சட்டப்படியான, தவிர்க்க முடியாத தற்காப்பு நடவடிக்கை என்பதால், வாழ்த்துக்கூற யாரும் வர வேண்டாம்' என்றார்.

வடக்கஞ்சேரியை சேர்ந்தவன்: கோவையில் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளி மோகனகிருஷ்ணன் பின்னணி குறித்து தகவல்கள் தெரியவந்துள்ளன. கோவை போலீசாரால் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட குற்றவாளி மோகனகிருஷ்ணனின் பூர்வீகம் கேரள மாநிலம் வடக்கஞ்சேரி. இவனது தந்தை ராதாகிருஷ்ணன், வடக்கஞ்சேரியில் லாரி டிரைவராக வேலை செய்தார். மோகனகிருஷ்ணனின் தாயார் சாவித்திரி ஆழியாறை சேர்ந்தவர். இவனுக்கு மோகனசுந்தரி என்ற சகோதரியும் உள்ளார். 15 ஆண்டுக்கு முன் பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சியில் குடும்பத்துடன் "செட்டிலாகி' விட்டனர். இங்கு, எம்.ஜி.ஆர்., நகரில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. பொள்ளாச்சி வந்ததும், தனியார் பஸ் டிரைவராக வேலை பார்த்த ராதாகிருஷ்ணன், ஆறு ஆண்டுக்கு முன் கோவை தனியார் மருத்துவமனை டாக்டரிடம் கார் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். மோகனகிருஷ்ணனுக்கு சரிவர படிப்பு வராததால், கார் "டிரைவிங்' கற்று கொண்டு தனியார் கால் டாக்சியை ஓட்டி வந்தான். தந்தை, மகன் இருவரும் கோவையில் வேலை செய்ததால், அங்கலக்குறிச்சி வீட்டை திருப்பூரில் டெய்லராக பணியாற்றி வருபவருக்கு வாடகைக்கு விட்டு, கோவையில் வசித்து வருகின்றனர்.

கோவைக்கு சென்றாலும், அங்கலக்குறிச்சி நண்பர்களுடன் மோகனகிருஷ்ணன் தொடர்பில் இருந்தான். ராதாகிருஷ்ணன் பணிக்கு செல்லாத போது, மோகனகிருஷ்ணன் தான் டாக்டருக்கு கார் ஓட்டியுள்ளான். அப்போது, நர்ஸ் வேலை செய்த ஆரோக்கியமேரியுடன் காதல் ஏற்பட்டு, இரண்டாண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டான். இவனது தங்கை மோகனசுந்தரியும் காதல் திருமணம் செய்து வாராகபாளையத்தில் வசிக்கிறார். அங்கலக்குறிச்சியில்,  வீட்டு வாடகை வசூலிப்பதற்காக மோகனகிருஷ்ணன் தாய் சாவித்திரி மட்டும் மாதந்தோறும் வருவார். இந்த சம்பவத்திற்கு பின் அவரும், அங்கலக்குறிச்சிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் பாதுகாப்புடன் சடலம் எரிப்பு: குழந்தைகளை கடத்திக் கொலை செய்த வழக்கில் சுட்டுக் கொல்லப்பட்ட டிரைவர் மோகனகிருஷ்ணனின் சடலம் போலீஸ் பாதுகாப்பில் எரிக்கப்பட்டது. இறந்த டிரைவரின் சடலம் கோவை அரசு மருத்துவமனையில் நேற்று பகல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த மோகனகிருஷ்ணனின் தந்தை ராதாகிருஷ்ணன், மனைவி பிரியா (எ) ஆரோக்கியமேரியின் சகோதரன் பாலகிருஷ்ணன் ஆகியோர் பிரேதத்தைப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்தனர். ஆனால் நேற்று இவர்கள் பிணத்தை பெற மறுத்து விட்டனர். இதை தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்குப் பின் போலீசாரே பிணத்தை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள மின் மயானத்துக்கு கொண்டு சென்று எரியூட்டினர். போலீஸ் பாதுகாப்பில் வந்த மோகனகிருஷ்ணனின் தந்தை, உறவினர்கள் பிரேதத்தை பார்த்து விட்டு, சில நிமிடங்களில் அங்கிருந்து சென்று விட்டனர்.

நீதி விசாரணையில் பிரியா ஆரோக்கியமேரி: போலீஸ் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கி இருந்த டிரைவர் மோகனகிருஷ்ணனின் மனைவி பிரியா நேற்று நீதி விசாரணையில் ஆஜரானார். அப்போது அவர் கூறுகையில், "கணவர் மிகப்பெரிய குற்றத்தை செய்துள்ளார். மன்னிக்க முடியாத குற்றவாளியான அவரை தண்டிக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. கொலை செய்யப்பட்ட ஏதும் அறியாத அப்பாவி குழந்தைகள் என் கண்முன் நிற்கின்றனர்.அவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது தெரியும். போலீசாரால் சுட்டுக் கொல்லப்படாமல் இருந்தாலும், கோர்ட் அவருக்கு தண்டனை வழங்கி இருக்கும். நானும், குழந்தையும் இப்போது அனாதையாகி விட்டோம். இச்சமுதாயம் என்னையும், குழந்தையையும் ஏற்று, ஆதரவு தர வேண்டும்' என்றார்.

தந்தை கதறல்: மோகனகிருஷ்ணனின் தந்தை ராதாகிருஷ்ணன் கூறும் போது, "மகனின் பிணத்தை சொந்த ஊருக்கு கொண்டு சென்றால், என்னை ஊர் மக்கள் ஒதுக்கி விடுவர். அந்த உடலை அடக்கம் செய்ய, அவன் குடும்பத்துக்காக எந்த தியாகத்தையும் செய்யவில்லை. அதனால் அவனது பிரேதத்தை பெற மாட்டேன். இப்படி ஒரு மகனை பெற்றதற்கு வெட்கப்படுகிறேன்'' என, தெரிவித்தார்.(dinamalar)

No comments:

Post a Comment