Thursday, November 11, 2010

சிறுவன் கடத்தல்காரர்கள் "என் கவுன்டர்' பீதியால் சாப்பிட மறுப்பு


 தொழிலதிபர் மகனை கடத்தி ஒரு கோடி ரூபாய் பறித்த, இருவரை காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கின்றனர். மூன்றாவது நாள் விசாரணையில், பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு அழைத்து சென்றதால், "என்கவுன்டர்' பீதியில் உறைந்து சாப்பிட மறுத்தனர்.


சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் கிரானைட் தொழிலதிபர் ரமேஷ். இவரது மகன் கீர்த்திவாசன்(13), முகப்பேரில் தனியார் பள்ளியில் படித்து வந்தான். கடந்த 1ம் தேதி பள்ளிக்கு வெளியே காரில் கடத்தப்பட்டான்.தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், கீர்த்திவாசனை பத்திரமாக மீட்டனர். மாணவனை கடத்திய விஜய், பிரபு என்ற இருவரை கடந்த 3ம்தேதி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.இருவரையும் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கடத்தல் தொடர்பாக,  தீவிர விசாரணை நடத்துவதற்கு இருவரையும் ஜெ.ஜெ.,நகர் போலீசார், கடந்த 8ம்தேதி நான்கு நாள் காவலில் எடுத்தனர்.விஜய், பிரபு ஆகியோரிடம் திருமங்கலம் உதவி கமிஷனர் சரவணன், ஜெ.ஜெ.,நகர் இன்ஸ்பெக்டர் சுந்தரம் தீவிர விசாரணை நடத்தினர்.


போலீஸ் விசாரணைக்கு, அவர்கள் இருவரும் ஒத்துழைக்கவில்லை. இதைத் தொடர்ந்து, கடந்த 9ம் தேதி அவர்களிடம் ஜெ.ஜெ.,நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அன்றிரவு இருவரும் வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.அங்கு, மத்திய சென்னை போலீஸ் இணை கமிஷனர் தாமரைகண்ணன், அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனர் பன்னீர்செல்வம் ஆகியோர், இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
.
அப்போது அவர்கள் கூறியதாவது:நாங்கள் கம்ப்யூட்டர் அவுட்சோர்சிங் பிசினஸ் செய்வதற்கு திட்டமிட்டோம். ஒரு கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் காட்டினால், ஐந்துகோடி ரூபாய் வரை கடன் கிடைக்கும். அதை வைத்து 50 தொழிலாளர்களுடன், பெரிய அளவில், கிழக்கு கடற்கரை சாலையில் அலுவலகம் வைத்து பிசினஸ் செய்ய திட்டமிட்டோம்.அதற்காகவே சிறுவனை கடத்தி பணம் பறித்தோம். பணத்தை உடனடியாக செலவிட்டால் தெரிந்து விடும் என்பதால், ஜனவரி மாதம் பிசினஸ் துவங்க முடிவு செய்தோம். நாங்கள் செய்த சிறிய தவறால் போலீசாரிடம்  சிக்கிக் கொண்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். தொடர்ந்து, மூன்றாவது நாள் விசாரணை நேற்றும் நீடித்தது.


நேற்று முன்தினம், கோவையில் குழந்தைகளை கடத்தி கொடூர கொலை செய்த குற்றவாளி மோகனகிருஷ்ணனை போலீசார் "என் கவுண்டர்' செய்த செய்தியை, போலீசார் பேசியதன் மூலமும், போலீஸ் நிலையத்தில் இருந்த பத்திரிகைகள் மூலமும் விஜய், பிரபு இருவரும் அறிந்தனர்.தங்களுக்கும் அதே கதிதான் ஏற்படும் என, நினைத்து பீதியில் உறைந்தனர். அதற்கு ஏற்றார் போல் விசாரணை நடத்திய போலீசாரும், அவர்களை ஒரே இடத்தில் வைத்திருக்காமல், பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு அழைத்துச் சென்றனர். நேற்று காலை வில்லிவாக்கத்தில் இருந்து அவர்கள் அண்ணாநகர், அமைந்தகரை, அரும்பாக்கம் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு மாறி மாறி அழைத்து செல்லப்பட்டனர். ஒவ்வொரு இடத்திற்கும் வேனில் புறப்படும்போதும், விஜய், பிரபு ஆகியோர் முகம், மரண பீதியில் உறைந்து போன தகவல் வெளியாகியுள்ளது.அதனால், இருவரும் நேற்று காலை, பகல், இரவு போலீசார் கொடுத்த உணவை சாப்பிட மறுத்தனர். அவர்களிடம் நான்காவது நாள் விசாரணை இன்று நடக்கவிருக்கிறது. அதன் பின், மாலை 4.30 மணிக்கு, இருவரையும் மீண்டும் அம்பத்தூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் சுதா முன்னிலையில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.(dinamalar)

No comments:

Post a Comment