மதுரையில் சாலை விபத்தில் சிக்கி, மூளையில் அடிபட்டு, சிகிச்சையில் இருக்கும் கல்லூரி மாணவரை காப்பாற்ற நிதிதிரட்ட, அனைத்து கல்லூரி மாணவர்களும், வரும் 14ம் தேதி, "மறுபிறவி' என்ற தலைப்பில் கலைநிகழ்ச்சி நடத்துகின்றனர்.
மதுரை மாவட்டம் குமாரம் அருகே வடுகப்பட்டி சத்துணவு பணியாளர் திருமால் மகன் கவுதம்(20). வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கிறார். இவரது சக மாணவர் மற்றொரு கவுதம்(20). இவரும் வடுகப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். இருவரும், தினமும் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு வந்து சென்றனர். அக்., 11ல் கல்லூரிக்கு செல்வதற்காக ரிசர்வ்லைன் பகுதியில் (ஹெல்மெட் அணியவில்லை) வந்தனர். அப்போது, அரசு டவுன் பஸ் மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த கவுதம் பலியானார். காயமடைந்த திருமால் மகன் கவுதம், மூளையில் அடிபட்டு வடமலையான் மருத்துவமனை சிகிச்சை பிரிவில் உள்ளார்.
இதை கேள்விப்பட்ட மற்ற கல்லூரி மாணவர்கள், முகம் தெரியாத அந்த மாணவருக்காக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை நண்பர்கள், உறவினர்களிடம் வசூலித்து ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். தொடர் சிகிச்சைக்காக, வரும் 14ம் தேதி மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில், மதியம் ஒரு மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு, "மறுபிறவி' என்ற தலைப்பில் கலைநிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டுகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களின் நடனம், இசை, நாடகம் நடக்கின்றன. போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், ஹெல்மெட் அணிந்து டூவீலர் ஓட்ட வேண்டும் என வலியுறுத்தி, இந்நிகழ்ச்சி நடக்கிறது. கலைநிகழ்ச்சியை பார்வையிட்டு, மாணவரின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் நீங்களும் பங்கேற்க, வேலாயுதம் (97860 88818), யோகேஷ் கார்த்திக் ( 88703 88845)ஐ தொடர்பு கொள்ளலாம்.(dinamalar)
No comments:
Post a Comment